Search This Blog

Sunday, 1 June 2014

கிரகப் பெயர்ச்சி பலன்கள்

2014 – குருஇராகுகேதுபெயர்ச்சி பலன்கள்


சுக்
கேது
சூரி
புத


13 – 6 – 2014
வைகாசி – 30
வெள்ளி
தனுசு=சந்.பகல் 1.39. மணி
கடக குரு=மாலை 5.57 மணி.
குரு


சந்

சனி
இராகு
செவ்

         குருப் பெயர்ச்சி : ஜய வருஷம் வைகாசி மாதம் 30 ஆம் நாள் (13 – 6 – 2014) வெள்ளிக் கிழமை நாழிகை 30 – 08 மாலை மணி 5 – 57 க்கு புனர்பூச நட்சத்திரம் 3 ஆம் பாதம் மிதுன இராசியில் இருந்து புனர்பூசம் 4 ஆம் பாதம் கடக இராசியில் வாக்கியப்படி பிரவேசிக்கிறார்.

சந்
கேது
சுக்
புத
சூரி

21 – 6 – 2014
ஆனி – 7- சனி
மேஷ = சந்.இரவு 1.33. மணி
கன்னி இராகு,மீனக் கேது =பகல்11.12 மணி.
குரு




சனி
இராகு
செவ்

         குரு 2, 5, 7, 9, 11 ஆகிய இராசிகளில் சுப பலன் தருகிறார். மற்ற இராசிகளில் அசுப பலன்களே ஏற்படுகின்றது. “குரு பார்க்கக் கோடி நன்மைஎன்பது சான்றோர் வாக்கு. எனவே, தேவகுருவான , குரு, இருக்கும் இடத்தைக் கெடுத்து, பார்க்கும் இடத்தை வளர்ப்பார், பெருக்குவார் என்பது நாம் அறிந்த ஒன்றே.

           ஒரு ஜாதகருக்குப் பிறப்பு முதல், குரு சுமார் 5 முதல் 7 பரியாயங்கள் வரை வரலாம். குரு, ஜாதகருக்கு, எத்தனையாவது பர்யாயம் என்பதைப் பொருத்து, பலன்கள் மாறுபடும். மேஷம் முதல் மீனம் வரை ஒரு பர்யாயம் எனக் கணக்கிடப்படுகிறது.

           முதல் பர்யாயம் ( முதல் சுற்று ) ; சந்திரா இலக்னத்துக்கு 8 இல் குரு வரும் போது, பலன் மரண பயம் என்றாலும், குழந்தை பிறந்தது முதல் 12 வருடச் சுற்றில் தந்தைக்கு தனலாபம் உண்டாகும். ஒன்பதாவது இராசியில் வரும் போது, மூத்த உடன் பிறப்புக்கு நற்பலன் ஏற்படும்.

        
  இரண்டாவது சுற்றில்மேஷ, ரிஷப இராசிகளில் பயணிக்கும் போது மங்களம் உண்டாகும்.

          மூன்றாவது பர்யாயத்தில், சந்திரா இலக்னத்தில் இருந்து 1, 4, 5, 7, 9, 10, 11, 12 ஆகிய இராசிகளில் பயணிக்கும் போது சுப பலன்கள் நடக்கும்..

          நான்காவது சுற்றில், ஜன்ம குரு அரசர் மற்றும் அரசு பகையையும், தனபாவத்தில் தன ஆதாயங்களையும், சுக பாவத்தில், சுக சௌக்கியங்களையும், பாக்கிய ஸ்தானத்தில் சகல சம்பத்தையும், 11, 12 இல் சௌபாக்கியங்களையும் தருவார்.

          ஐந்தாவது பரியாயத்தில்ஜன்ம இராசியில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் மனக் கிலேசமும், தன பாவத்தில்தன வரவையும், 3, 4 ஆகிய பாவங்களில் சுப பலனையும் தருவார்.

       இராகுப் பெயர்ச்சி : ஜய வருஷம் ஆனி மாதம் 7 ஆம் நாள் (21 – 6 – 2014) சனிக் கிழமை நாழிகை 13 – 12 பகல் மணி 11 – 12 க்கு சித்திரை நட்சத்திரம் 3 ஆம் பாதம் துலா இராசியில் இருந்து சித்திரை 2 ஆம் பாதம் கன்னி இராசியில் வாக்கியப்படி பிரவேசிக்கிறார்.

          இராகுவின் பலனில் தீமைநிலை மற்றும் உலக இன்ப நாட்டம் அதிகம் காணும்.

       கேதுப் பெயர்ச்சி : ஜய வருஷம் ஆனி மாதம் 7 ஆம் நாள் (21 – 6 – 2014) சனிக் கிழமை நாழிகை 13 – 12 பகல் மணி 11 – 12 க்கு அஸ்வினி நட்சத்திரம் 1 ஆம் பாதம் மேஷ இராசியில் இருந்து ரேவதி 4 ஆம் பாதம் மீன இராசியில் வாக்கியப்படி பிரவேசிக்கிறார்.

         கேதுவின் பலனில் நன்மைகள், தெய்வீக, ஆன்மிக சிந்தனைகள், இம்மை-மறுமை இரண்டையும் வெற்றிபெறச் செய்தல் ஆகிய நன்மைகள் ஏற்படும்.

மேஷம்

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1,2,3,4 பாதங்கள்)

    தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே!
 
         குரு மேஷ இராசிக்கு பாக்கியம் மற்றும் விரய பாவாதிபதியாகி, சுக பாவமான  4 இல் அமர்ந்து, ரஜத மூர்த்தியாகி 25 சதவிகித நற்பலன்களைச் செய்கிறார். “தரும புத்திரர் நான்கிலே வனவாசம் அப்படிப் போனதும் ”- என்றபடி சிலருக்கு வெளியிடத்தில் சென்று வசிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். தந்தை மூலம் ஆதாயம் உண்டு. பங்குச் சந்தை முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. டிசம்பர் மாதத்தில் மட்டும் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு வரலாம். குரு, 8, 10, 12 ஆம் பாவங்களைப் பார்ப்பதால், எதிர்புகள் மறையும். நண்பர்கள் உதவுவர். ஜீவன சுகம், தொழில் மேன்மை, புகழ், கௌரவம் சிறக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். திருச்செந்தூர் முருகனை வழிபடத் திருப்பங்கள் ஏற்படும்.

         இராகு ஜூலைக்குப் பிறகு நன்மை தருவார். உபரி வருமானங்கள், வேற்று மதப் பெண் தொடர்பு ஏற்படலாம். கேதுசிலருக்கு சந்நியாசம் பெறும் எண்ணம் ஏற்படலாம். மற்ற காலங்களில் இராகு- கேதுவின் தீமைகள் குறைந்து, நன்மைகள் பெருக ஒரு முறை காளஹஸ்தி சென்று வரலாம்மொத்தத்தில் இவ்வருடம் 50 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

ரிஷபம்

( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

   களத்திரகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே!

         இந்த இராசிக்காரர்களுக்கு உலோக மூர்த்தியாக வரும் குரு 15 சதவிகித அளவுக்கு சுமாரான பலன்களைத் தருவார். மங்கள காரியங்கள் நடக்கும், பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கிராம அதிகாரம், அரசு பதவிகள் கிடைக்கும். சிலருக்குக் குறிக்கோளற்ற அலைச்சல்களால் உடல் அசதி அதிகரிக்கும். பிறருக்குக் கட்டளையிடும் அரசு உயர் பதவி கிடைக்கும். நல்ல சந்ததிகள் உருவாகும். 7, 9, 11 ஆம் பாவத்தைப் பார்க்கும் குரு, திருமணத் தடைகள் நீக்கித் திருமண வாழ்வு தருவார். கூட்டுத் தொழில் இலாபம் தரும். புனித யாத்திரை மற்றும் மகான்களின் தரிசனம் கிட்டும். புதிய வீடு, வாகன சுகம் கிடைக்கும். குருமார்கள் மற்றும் ஆசிரியர்களை வணங்கத் துன்பங்கள் குறையும்.

         இராகு அவமானங்களையும், விரோதம் மற்றும் புத்திர தோஷத்தையும் தருவார். ஞான மார்க்கத்தில் ஈடுபாடு தரும் கேது, வியாபாரத்தைப் பெருக்குவார். பதவி உயர்வு மற்றும் அரசாங்கத்தில் அதிக வருமானம் ஆகியவற்றை எதிர் பார்க்கலாம், வாக்குச் சுத்தம் இருக்கும். அரசன் போல் வாழ்வார்மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

மிதுனம்

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

    கல்விக் காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனராசி அன்பர்களே!

         13– 6– 2014 இல் கடகத்துக்கு மாறும் குரு தாமிர மூர்த்தியாகி 75 சதவிகித நற்பலன்கள் தருவார். களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தானாதிபதியான அவர் தன பாவத்தில் அமர்ந்து, இதுநாள்வரை இருந்து வந்த இன்னல்களை நீக்கி இன்பம் தருவார். செல்வம் சேரும். அழகும் பொலிவும் கூடும், வாக்குவன்மை அதிகரிக்கும். புத்தி தெளிவும், அறிவுக் கூர்மையும் ஏற்படும். பெயரும் புகழும் ஓங்கும். வேலை இல்லாது இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு ஆண் சந்ததி ஏற்படலாம். பதவி, அந்தஸ்து உயரும். அவர் 6, 8, 10 ஆம் பாவங்களைப் பார்ப்பதால், ஆரோக்கியம் சீர்படும். எதிர்ப்புகள் மறையும். கஷ்டம் தரும் எட்டைப் பார்க்கக் கஷ்டங்கள் அனைத்தும் பஞ்சாய்ப் பறக்கும். தொழில் மேன்மை அடைவது உறுதி. புதிய வாய்ப்புக்கள் கதவைத் தட்டும். வியாழக்கிழமை விரதம் பலன்தரும்.

         இராகு அதிக செலவுகளையும், தூக்கமின்மையையும், விரோதத்தையும் தருவார். எதிலும் முன்னெச்சரிக்கை தேவை. கேது, பணவரவும் இலாபமும் தருவார். சிலர் போலித் துறவியாவர். வேள்வி மற்றும் யாக காரியங்கள் செய்வர். சிலர் மடாதிபதிகள் அல்லது மதத்தலைவர் ஆகலாம். மொத்தத்தில் 75 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.


கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

   தாய்க்குக் காரகனான சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக இராசி அன்பர்களே!

         ருண மற்றும் பாக்கிய அதிபாதியான  குரு, ஜன்ம குரு ஆனாலும், சுவர்ண மூர்த்தியாகி  கடகத்தில் பிரவேசிப்பதால் மாறுபட்ட நல்ல பலன்களே ஏற்படும். குரு பார்க்கக் கோடி நன்மையென்பதால், மனைவி மக்களுடன் வாழ்க்கை மகிழ்ச்சியாகக் கழியும். புத்தி சாதுர்யமும், அறிவும் விருத்தியாகும். அரசு மூலம் வெகுமதிகள் கிடைக்கும்சிலர் இராஜ தந்திரத்தால் அரசியலில் உயர் பதவிகளை அடைவர். 5, 7, 9 ஆம் இடங்களைப் பார்வை புரியும் குரு, புத்திர பாக்கியம் தருவார் சிலருக்குப் பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கலாம். வேத, மந்திர உபதேசம் பெறும் உயர்ந்த நிலை ஏற்படும். தடைப்பட்ட திருமணங்கள் நடைபெறும். மகிழ்ச்சிகரமான மண வாழ்க்கை அமையும். உற்ற நண்பர்கள் உறுதுணையாய் இருப்பர். தந்தை, மகனிடையே இருந்து வந்த மனக் கசப்புகள் தீரும். தெய்வ தரிசனம், தெய்வீகப் பயணங்கள் தேடிவரும்.

         இராகுவால், பிரிவினையால் ஏற்பட்ட சோகங்கள் மாறும். இனி தனவரவு ஏற்படும். மனோதைரியம் ஓங்கும். பல வழிகளிலும் சுக சௌக்கியங்கள் ஏற்படும். சிலருக்கு வேற்றுப் பெண் உறவு ஏற்படலாம். புதுப்புது பதவிகள் கிடைக்கலாம். கேது 9 இல் வர பிறர் சூழ்ச்சிக்கு ஆளாக நேரலாம். எச்சரிக்கை தேவை. ஞானத்திலும், தவத்திலும் நாட்டம் ஏற்படும். சிலர் ஏமாற்றும், கபட சந்நியாசியாக மாறலாம்.. நல்ல குரு வாய்க்கப் பெற்று அதனால் ஆன்மிக வழியில் அறிவுத்தெளிவு ஏற்படும்மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

சிம்மம்

( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

    தந்தை காரகனான சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்மராசி அன்பர்களே!

         சிம்மத்திற்கு 12 ஆம் இடத்தில்  ரஜத மூர்த்தியாகப் பிரவேசிக்கும் குரு 25 சதவிகித நற்பலன்களைத் தருவார். பூர்வ பண்ணியம் மற்றும் ஆயுள் ஸ்தானாதிபதி குரு விய பாவத்தில் அமர்வு. இதனால் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். 8 ஆம் அதிபதி 12 இல் அமர விபரீத இராஜ யோகமும் ஏற்படுகிறதுசிலருக்குப் பெண்ணால் அவமானம் நேரலாம். வெளிநாட்டுப் பயண வாய்ப்புக்கள் ஏற்படலாம். 4, 6, 8 ஆம் பாவத்தின் மீதான பார்வை, தாய்க்கு ஆரோக்கியத்தைத் தரும். பழைய வீடுகள் வாங்க, விற்கச் சரியான நேரமிது. எல்லாவற்றிலும் அச்ச உணர்வும், தயக்கமும் ஏற்படும். தேவையென்று வரும்போது கையிலிருக்கும் பணம் கூட உதவாமல் போகும். தான தர்மமெனக் கைப் பணம் கரையும்.

         இராகு, குடும்பத்தில் குழப்பங்களைத் தருவார். ஏவல், செய்வினை போன்ற தொல்லைகள் எழலாம். கேது ஆரோக்கியக் குறைவைத் தருவார். ஒழுக்கக் குறைவு ஏற்படும்.காளகஸ்தி சென்றுவரக் கவலைகள் குறையும். மனைவியின் அரவணைப்பு ஆறுதல் தரும். மொத்தத்தில் இவ்வருடம் 50 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

கன்னி

( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

    புத்தி காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட கன்னிராசி அன்பர்களே!

         தங்கள் இராசிக்கு குருவின் பொதுப்பலனுடன் உலோகமூர்த்தி பலனும் இணைந்து 75 சதவிகித நற்பலன்களைத் தருகிறார். சுக மற்றும் களத்திர ஸ்தானாதிபதியான குரு இலாப ஸ்தானத்தில் அமர்வு. இதன் காரணமாக அரசியல் அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும். பாக்கியம் பெருகும். பெரும்புள்ளிகள் சிலர் அறிமுகமாகி அதனாலும் முன்னேற்றமடைவர். சொகுசு கார் போன்ற வாகனங்கள் கிடைக்கும். பல வழிகளிலும் பணம் வந்து சேரும். வங்கி சேமிப்புக்கள் உயரும். குரு 3, 5, 7 ஆம் இடங்களைப் பார்ப்பதால், காரிய வெற்றியும், சகோதரர்களிடம் மதிப்பும் உண்டாகும். தைரியமும், தன்னம்பிக்கையும் உயரும். குழந்தைகள் மூலமாக நன்மைகள் ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமணம் நடக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகள் ஏற்படும். மனைவியால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டுத் தொழில் சிறக்கும். சங்கரன்கோவில் சென்றுவரச் சங்கடங்கள் தீரும்.
          
         ஜன்ம இராகு பெற்றோருக்கு ஆரோக்கிய குறைவையும், களத்திரபாவ கேதுவால், சிலருக்கு முறைமீறிய காதல் ஏற்பட்டு, கட்டாயத் திருமணத்தில் முடியலாம்.  குணம் கெட்ட பெண்ணுடன் தொடர்பு ஏற்படும். மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.


துலாம்

(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாராசி அன்பர்களே!

         குருவின் தசம கேந்திர பிரவேசத்தால் மரியாதைக் குறைவு, பொருள் இழப்பு, இடமாற்றம், உயர் அதிகாரிகளின் அதிருப்தி என மாறுபட்ட பலன்களாகவே அமைந்தாலும், தனது உச்ச இராசிப் பிரவேசத்தால் இப் பலன்கள் மட்டுப்படும். மேலும் துலாராசிக்குரிய பொதுப்பலன் பூஜ்யமாகி, அவர் தாமிர மூர்த்தியாகி வருவதால் சுமார் 12 சதவிகித பலன்களை மட்டுமே அளிக்கிறார். சகோதர மற்றும் ருண பாவாதிபதி குரு கர்ம பாவத்தில் அமர்ந்தால், பிறர் தயவை எதிர் பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். குரு பார்வை செய்யும் இடங்களான 2, 4, 6 ஆம் இடங்கள் தரும் பலனால், சுப காரியங்கள் இனிதே நடக்கும். வாக்குவன்மை மேன்மை அடையும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கல்வி நிலை உயரும். உயர் படிப்புக்கான வாய்ப்புக்கள் அமையும். உறவுகளால் நன்மை உண்டு. வம்பு, வழக்குகளில் வெற்றி கிட்டும். மதுரை மீனாட்சி கோவில் குருவை வணங்க மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

         இராகு, கன்னியில் கால் பதிக்கும் காலத்தில் ஜாதகருக்கு மறைபொருள் விஞ்ஞானத்தில் ஆர்வத்தையும், அதனால் இலாபத்தையும் அளிக்கிறார். சயன சுகம் கெடும். ஆனால் கேதுவின் மாற்றம் குடும்பக் குழப்பத்தையும், வழக்கு வியாஜ்யங்களயும் அதன் காரணமாக அதிகரிக்கும் செலவினங்களையும் தந்தாலும், குருவின் பார்வை அவற்றை மட்டுப் படுத்தும் என்றால் மகிழ்ச்சிதானே ! மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

விருச்சிகம்

( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

         தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக இராசி அன்பர்களே!

         அலைச்சல் மிக்க பயணங்களையும், பாதக நிலைகளையும் அளித்துக் கொண்டிருந்த குரு, தனம் மற்றும் புத்திர பாவாதிபதி ஆகி, பாக்கிய பாவமாகிய கடகத்திற்கு மாறும் காலத்தில் இதுநாள் வரை இருந்து வந்த இன்னல்களை நீக்கி எல்லா முன்னேற்றங்களையும் தந்து இன்பமுறவும், ஈடு இணையற்ற புகழை அடையவும், வீட்டில் இன்பமும் மகிழ்ச்சியும் பொங்கி வழியவும் ரஜத மூர்த்தியாகி அருள்பாலிக்கிறார். மூர்த்தி நிர்ணயபலன் 25 சதவிகிதமும், குருவின் பொதுப்பலனாக 50 சதவிகிதமும் இணைந்து 75 சதவிகித பலன் தந்து விருச்சிகத்தாருக்கு ஏற்றம் தருகிறார். இதன் காரணமாக இராஜ தந்திரத்தால் அரசியலில் நல்ல பதவிகள் கிடைக்கும். ஆசாரம் மற்றும் ஒழுக்கம் கூடும். இராஜயோகம் உண்டாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மற்றவர்கள் இவர் கட்டளைக்கு அடிபணியும்படியான அதிகார பதவிகள் வந்து சேரும். 1, 3, 5 ஆகிய பாவங்களின் மீதான பார்வை தரும் பலன், தங்கள் மதிப்பு மரியாதை உயரும். வாழ்க்கையில் எதிர்பார்த்த நல்ல முன்னேற்றங்கள் சாத்தியமாகும். பயணங்களால் நன்மை உண்டு.

         இராகு, மூத்த சகோதரரால் மற்றும் நெருங்கிய நண்பர்களால் ஆதாயம் தருகிறார். நல்ல சுவையான உணவு வகைகளை உண்டு மகிழ்வர். பணவரவு பல வழிகளிலும் மேலும் பெருகும். மனைவி, மக்களின் ஆரோக்கியம் பெருகி, புதுப் பொலிவுடன் திகழ்வர். கேது துவக்கத்தில் வேலை மூலமாக, தொழிலாளர் மூலமாக மற்றும் உதவியாளர் மூலமாக இலாபம் தருகிறார். பின்னர் சில பெண்களுக்குக் கருச்சிதைவை ஏற்படுத்திவிடுகிறார். ஞானகாரகன் ஆவதால் புத்தி தெளிவையும், செயல் திறனையும் அதிகமாக்குவார். மொத்தத்தில் இவ்வருடம் 70 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
தனுசு

 ( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1,2 பாதங்கள்)

தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட தனுர் இராசி அன்பர்களே!

         தனுசு இராசி அன்பர்களுக்குப் பொதுப்பலன் பூஜ்யமாக இருந்தாலும், சுவர்ண மூர்த்தியாகி 50 சதவிகித பலன்களைத் தரவல்லவர் குரு. இலக்னம் மற்றும் சுக பாவாதிபதியாகி, ஆயுள் பாவத்தில் அமர்ந்துள்ளார்சத்துருக்களை நாசம் செய்த வாலியே, இராசிக்கு 8 இல் குரு வந்த போது கோதண்ட இராமனின் அம்புக்குப் பலியானார்.  ஆரோக்கியத்தில் அலட்சியம் கூடாது. பணிபுரியும் இடத்தில் கடமை தவறாது நடத்தல் அவசியம். நல்ல நண்பர்களின் தொடர்பு நலம் பயக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்தல் அரிது. அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும். பின்னர் கீழ்நிலையில் உள்ளவர்கள் உடனான சினேகத்தால் அவமரியாதை ஏற்படும். 12, 2, 4 ஆம் பாவாத்தின் மீதான குருவின் பார்வையால், வீண் விரையச் சுபச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். வாக்குவன்மை உயரும். தாயாரின் ஆரோக்கியம் சிறப்படையும். வீடு, நிலம் வாங்க, விற்க அனுகூலமான காலமாகும். ஆலங்குடி குருவைத் துதிக்க அனைத்தும் சுபமே.


         இராகு பலவகையில் புகழ் மற்றும் சுகத்தை அதிகரிக்கிறார். காசியாத்திரை செல்லலாம். கேது சூதாட்டத்தில் பொருள் இழப்பைத் தருவார். தொடைப் பகுதியில் உபாதைகளைத் தருவார். வீண்பயம், சந்தேகம், பாதத்தில் ரோகம் ஆகியவை ஏற்படும். சிலருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டுத் துறவு நிலை ஏற்கும் எண்ணம் ஏற்படும். மொத்தத்தில் இவ்வருடம் 55 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.


மகரம்

( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

கர்மகாரகனான சனியை அதிபதியாகக் கொண்ட மகரராசி அன்பர்களே!

      குரு, விய மற்றும் தைரிய பாவாதிபதி ஆகி, களத்திர பாவமான கடகத்தில்  உலோக மூர்த்தியாகப் பிரவேசிக்கும் காலத்தில் பொதுவான பலனும், மூர்த்தி நிர்ணய சிறப்பு பலமும் இணைந்து 60 சதவிகிதம் நற்பலன்களை அளிக்கிறார். இதன் காரணமாக மனைவி மூலமாக பூரண சுகம் கிடைக்கும். அரசு மூலம் வெகுமானம் கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி உண்டாகும். கணவனுக்கு அடங்கிய மனைவியாக இருப்பாள். அரசு மூலம் பரிசுகள் கிடைக்கும். பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். அதிகமாக செல்வம் சேரும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். 11, 1, 3 ஆம் இடத்தின் மீதான பார்வையால் இலாபம் பெருகும். அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வுகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். பயணங்கள் நன்மை தரும். திருவானைக்காவல் குருவை வணங்க தீராத வினைகள் தீரும்.

         இராகு முயற்சிகளைத் தடை செய்வார். பிரிவுகளால் மன அமைதி கெடும். மாந்த்ரீகம், பில்லி, சூனியம் போன்ற வித்தைகளில் ஈடுபாடு ஏற்படும். கேது எல்லாவற்றிலும் வெற்றி தருவார். பணவரவு அதிகரிக்கும். அரச வாழ்வு வாழும் நிலை ஏற்படும். சொன்ன சொல் தவறமாட்டார். மொத்தத்தில் இவ்வருடம் 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

கும்பம்

( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

கர்ம பாவ காரகனான சனியை அதிபதியாகக் கொண்ட கும்பராசி அன்பர்களே!

          தன மற்றும் இலாப பாவாதிபதி ஆகி ருண பாவ சஞ்சார காலத்தில் வெற்றி ஸ்தானத்தில் பொதுப்பலன் குறைந்து, சுவர்ண மூர்த்தி பலத்துடன் 50 சதவிகித நற்பலன்களைத் தருகிறார் குரு. சிலருக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். ஏமாற்றங்கள், மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை, கணவன் மனைவிக்கிடையேயான ஊடல்கள் ஆகியவை தவிர்க்கமுடியாத நிகழ்வுகளாகும். ஆயினும் குரு சுவர்ணமூர்த்தியாக இருப்பதால் பாதக பலன்கள் மட்டுப்பட்டு சாதக பலன்களாக அமையும். 10, 12, 2 ஆகிய பாவங்களின் மீதான குருவின் பார்வை, தொழில் தடைகளை அகற்றி முன்னேற்றம் தரும், தேங்கிய பொருட்கள் விற்பனையாகி வருமானம் பெருகும். காரிய வெற்றி, அரசால் இலாபம் ஏற்படும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீடு, நிலம், வாகனம் ஆகியவை அபிவிருத்தி ஆகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் உயரும். கல்வியில் உயர்வு உண்டு. திருக்கடையூர், அமுதகடேஸ்வரர் ஆலயத்தில் குருவை வணங்க நன்மை பயக்கும்.

         இராகுவால் அவமானம், பிரிவு ஏற்படும். கேதுவால் தரங்கெட்ட உணவு உட்கொள்ள நேரும்மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்
மீனம்

( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

    தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே!

          குரு, இராசி மற்றும் கர்ம பாவாதிபதி ஆகி புத்திர பாவத்தில் அமரும் காலங்களில் மனைவி மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழியும்வீட்டில் மங்கள சுபகாரியங்கள் இனிதே நடந்து மகிழ்ச்சி நிலைத்திருக்கும். குரு தாமிர மூர்த்தியாகி பிரவேசிப்பதால் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் நட்பு ஏற்படும். புகழ் அதிகரிக்கும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். சிலருக்கு அரசு உத்தியோகம் கிடைக்கலாம். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். 9, 11, 1 ஆகிய பாவங்களின் மீதான பார்வை, உத்தியோக உயர்வு, விரும்பிய இடத்திற்கு இடமாற்றம், மதிப்பு மரியாதை கூடுதல், தீர்த்த யாத்திரைகள், தொழில் முன்னேற்றம், எதிர்பார்த்ததைவிட அதிக இலாபம் ஆகியவை ஏற்படும். இராமேஸ்வர புனித யாத்திரை இன்பத்தைப் பெருக்கும்.

         இராகுவால் பரதேச வாசம் ஏற்படும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். வயதில் மூத்த பெண்கள் நட்பு ஏற்படலாம். கேதுவால் அவதிகள் அதிகமாகும். விபத்தைத் தரலாம். உஷ்ண சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம். எனவே எச்சரிக்கை தேவை. கேதுவால், பக்தியால் ஞானம் மேலிடும். மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

                 --- ஜோதிட ப்ரவீணா. எட்டயபுரம். எஸ். விஜயநரசிம்மன்.
                                           எம். எஸ்ஸி. (அப்ளைடு அஸ்ட்ராலஜி).





0