உ
இராகு – ஒரு புதிய கண்ணோட்டம்.
நிழல் கிரகங்களான இராகு மற்றும்
கேதுக்களுக்கு, பூமியிலுள்ள மனித விவகாரங்களின் மீதான அவற்றின்
தாக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வேத ஜோதிடமாகும். இந்த ‘ நோட்ஸ் ‘ எனும் நிழல் கிரங்களை,
மற்ற கிரகங்களைப் பலன் கூறும் முறைகளில் பயன்படுத்துவது போல் சில ஜோதிடர்கள்
பயன்படுத்துவதில்லை. அப்படி பயன்படுத்தினாலும் அவைகளைப் புதிய
கண்ணோட்டத்தோடு பார்க்க முற்படுவதில்லை. உதாரணமாக, முன்வினை அல்லது நமது முன்னோர்களைப் பற்றி அறியமுற்படும் போது இந்த நிழல் கிரகங்களே
வேத ஜோதிடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அதுவே மேலைநாட்டு
ஜோதிடத்தில் முற்பிறவியில் செய்த நல்வினைகள் வடக்கு வெட்டுப் புள்ளி எனும் இராகுவாலும்,
தீவினைகள் தெற்கு வெட்டுப் புள்ளி எனும் கேதுவாலும் அறியப்படுகின்றன.
நவீன கால வேத ஜோதிடர்களில் பெரும்பாலானோர் ஜாதகத்தில் இராகு மற்றும் கேது இருவரையுமே
அசுபக் கிரகமாகவே கருதுகின்றனர். இராகுவானவர், கேதுவைவிட அதிக அசுபத்தன்மை உடையவராகவும் கருதுகின்றனர். அதிலும் பண்டைய வேத ஜோதிடர்களால் இவர்களைப் பற்றிய பயங்கலந்த தாக்கமே பூதாகாரமாக
வெளிக்கொணரப்பட்டது என்றால் மிகையாகாது.
இதற்கு முக்கிய காரணம் என்னவெனில்,
இந்த இரு நிழல் கிரகங்களின் தாக்கம் சமூக மற்றும் பாரம்பரியத்துக்கு
முரண்பட்டதாகக் கருதப்பட்டதே ஆகும். உதாரணமாக மிலேச்சர்களாகக்
கருதப்பட்ட வெளிநாட்டு வாசிகளின், நமது கலாசாரத்தின் மீதான மற்றும்
வாழ்க்கையின் மீதான தாக்கத்தைச் சொல்லலாம். அதுவே நமது கலாசாரத்தின்
மீதான மிகப் பெரிய ஊழலாகக் கருதப்பட்டது.
ஆனால் தற்காலத்தில் வெளிநாட்டுப்
பயணம், வெளிநாட்டவர்கள் உறவு அல்லது தொடர்பு ஆகியவை நமது நாட்டவரால்
சகஜமான ஒன்றாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அதன் காரணமாக நிழல் கிரகங்களின்
மீதான நமது ஜோதிடர்களின் கண்ணோட்டமும் மாறிவிட்டது.
சனி வக்த் இராகு = சனியைப்போன்ற குணமுடையவர் இராகு என்றும் இயற்கை அசுபரான அவர் அமரும் இடத்தைப்
பொறுத்து தற்காலிக சுபராகவும் செயல்படுவார். அது இணைந்த கிரகத்தின் சக்தியை தடைப்படுத்தவோ
அல்லது சீரழிக்கவோ செய்யும். தசாமற்றும் புத்திக் காலங்கள் மற்றும்
கோசார நிலைகளில் இராகு மிகவும் மோசமானதாகக் கருதப்படுகிறது.
குஜ வக்த் கேது – செவ்வாயின் குணங்களைக் கொண்டவன் கேது, இயற்கை அசுபர்
ஆவார். இவர் இராகுவைவிடக் குறைவான அசுபத்தன்மையும், அதிக பக்தித் தன்மையும் உடையவர். ஆனால், அவர் வெற்றி பெறுவதில் அதிகத் தடைகளை அளிப்பவர். ஆனால்,
இராகு எப்போதாவது வெற்றிகளைத் தரக்கூடியவர். இவர்கள்
இருவரும், உடலில் கோளாறு, குணம் தர முடியாத
நோய்கள், திடீரென ஏற்படும் இன்னல்கள், இருண்ட
வாழ்க்கையின் மீதான கவர்ச்சி ஆகியவற்றைத் தரக்கூடியவர்கள்.
பண்டைய முனிவர்களான பராசரர்
மற்றும் ஜெய்மினி ஆகியோர் இந்த நிழல் கிரகங்களைப் பற்றி மிகவும் விளக்கமாக எழுதியுள்ளனர்.
மேலும், இவர்களைப் பற்றிய அனுகூலமான பலன்களையும்
கூறியுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி இராகு அறிவையும்,
கேது – மோட்சம் எனும் விடுதலையையும் அளித்து,
மனித வாழ்க்கையில் மிக்க தாக்கத்தையும் தருகிறது.
வேத ஜோதிடத்தில் வெளிக் கிரகங்களான
யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளுட்டோ ஆகியவை பலன் காண எடுத்துக்
கொள்ளப்படுவதில்லை. எனினும், இந்த யுரேனஸ்,
நெப்டியூன் ஆகிய கிரக காரகங்களான பொய்த் தோற்றம் அல்லது மாயை,
கற்பனையான, பிரமை, மனத்தோற்றம்.
கலைத்துவிடல், பிரித்துவிடல், திடச் சித்தமின்மை, உருவாக்குதல், உடைத்துத் தூளாக்குதல், புரட்சிகரமான -- போன்றவை அனைத்தும் இராகுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
புளுட்டோவின் காரகங்களான உடலமைப்பு, அடங்காத, பிடிவாதமுள்ள, விலக்குதல்,
ஊடுருவுதல், மாற்றியமைத்தல், பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய சக்தி ஆகியவை கேதுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
மேற்கத்திய ஜோதிடப்படி இராகு
எப்போதும் நல்ல பையனாக இருப்பதில்லை. சிலநேரங்களில் மட்டும் அவர்
குருவைப் போன்று நற்குணம் கொண்டவராகத் திகழ்கிறார் என வேத ஜோதிடம் கருதுகிறது.
சில நேரங்களில் குரு, சுக்கிரன் போன்ற சுபர்களைக்
காட்டிலும் மிகுந்த நற்பலன்களைத் தரவல்லவர். எனவே, தற்கால ஜோதிடர்களின் கருத்துப்படி இராகு ஒரு நிரந்தர போக்கிரிப் பையன் என்ற
பிம்பமும் தவறானது.
எனினும், இராகுவின், பிரச்சனைகளுக்கு மூலகாரணமான எதிர்மறையான குணங்களை
வெளிக் கொணர்வது வேதஜோதிட முறையாகும். சாஞ்ஜா சாய்கிற பக்கமே
சாய்கிற வெள்ளாடு போல் இருக்கின்ற மனித குணத்திற்கும், கூட்டாக
வேலை செய்கிற தாக்கத்திற்கும் காரணமாவது இராகுவேயாம்.
மேற்கத்திய ஜோதிடம்,
கேதுவை ஒப்பந்தம், உடன்படிக்கை, கட்டுப்படுத்துதல், வரம்புக்குள் வைத்தல் போன்ற குணமுடைய
எதிர்மறையாளராகக் கருதினாலும், ஒருவரின் முழுத்திறமையையும் குறிகாட்டுபவர்
என்பதையும், மற்ற அனைத்து கிரகங்களையும் விட பக்தி, ஞானம் மிக்கவர், மோட்சத்திற்கு வழிகாட்டி என்பதையும்
மறந்துவிடக் கூடாது என்கிறது. அதுவே, வேதஜோதிடத்தில்,
ஒருவர் தனது மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கும், தத்துவார்த்தமான
எண்ணங்களோடு, உள்ளுணர்வுடன் பிறர் மனதை ஊடுருவும் தன்மை போன்ற கேதுவின் நேர்மறையான (+) குணங்கள் உயர்வாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
முற்பிறவியில் நாம் செய்த பாவங்களுக்கு
உரிய தண்டனையாக நிழல் கிரகங்கள் கஷ்டங்களைத் தருகின்றன.
வேதஜோதிடத்தின் இல்லமாகத் திகழும்
இந்தியா ஏழை நாடாக விளங்குவதால்,
எதிர்மறைக் (--) காரகங்களான ஏழ்மை, பசி, பட்டினி, தொற்றுநோய் மற்றும்
கொள்ளை நோய் ஆகியவை ஐரோப்பா, அமெரிக்கா போன்ற மற்ற மேல் நாடுகளில்
இருந்தாலும், இங்குமட்டுமே அதிகமாகப் பேசப்படுகின்றன.
இதன் காரணமாகவே, மேலைநாட்டு ஜோதிடர்களை விட,
நமது வேத ஜோதிடர்கள் நிழல் கிரகங்களின் எதிர்மறையான, அனுகூலமற்ற நிலைகளைப் பற்றியே பெரிதாகப் பேசுகிறார்கள். ஆனால் மேல் நாட்டு ஜோதிடர்கள் இது போன்ற எதிர்மறை காரகங்களைக் கூறாமல்,
இராகு தரும் வெற்றியைப் பற்றிய அனுகூல நிலையை மட்டுமே பெரிதாய் பேசுவர்.
இராகு ஒரு ஜாதகரின் தோற்றத்தில்
பாதிப்பை ஏற்படுத்துவதால், அதன் தோற்ற அமைப்பைப் பற்றி பார்ப்போம்.
இராகு, பாம்பின் உடலும், மனிதத் தலையும் கொண்ட வடிவ அமைப்பை உடையவர். அதன் காரணமாக
பயம் தரும் அமைப்பை உடையவராகிறார். வேதஜோதிடத்தில் இராகுவுக்குப்
பல பெயர்கள் உண்டு. கொடூரன், பயங்கரமானவன்,
திகைப்புடன் கூடிய அச்சத்தை அளிப்பவன், நாகம்,
தலை, நீலம், கரும்பாம்பு,
பாதி உடல் உடையவன், புகைமண்டலத் தலையுடையவன்,
ரத்தச் சிகப்புடைய கண்களை உடையவன், மரணத்தை அளிக்கும்
கொடூரப் பார்வை உடையவன், கோரைப்பல் , விஷப்பல்,
நச்சுப்பல் உடைய மற்றும் கன்னம் முழுவதுமான பெரிய மீசை உடையவன் என்றெல்லாம்
குறிப்பிடப்படுகிறது.
இராகு கிரக மண்டலத்தின் இரண்டாவது
மூத்த, மூப்புடைய கிரகமாய் இருந்தாலும், வயதான முகத் தோற்றம் மற்றும் நடவடிக்கைகளை உடையவரல்ல. உண்மையில் இளமை ததும்பும், மற்றவர்களை மயக்கிவிடும் வசீகர
முகம் உடையவர். சாதாரண முகத் தோற்றம் உடையவராக இருந்தாலும் இராகுவின்
முகத் தோற்றத்திற்கு ஈடு இணையில்லை. நவீன யுகத்தின் அழகிப் போட்டிகளில்
பங்கு பெற்று, திடீரென பிரபஞ்ச அழகிகளாய் தேர்ந்தெடுக்கப்பட்டு
உலகப் புகழ் பெறும் பல அழகுராணிகளின் ஜாதகத்தில் இராகுவின் இலக்னாதிபதி மற்றும்
2 ஆம் அதிபதியுடனான தொடர்பு அல்லது 2 ஆம் இட அமர்வு
இருப்பதைக் காணலாம். அதன் காரணமாகவே அவர்கள் அழகு தேவதைகளாகத்
தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.
இராகு மிக உயரமான மனிதர்களைக்
குறிக்கும். இவரின் இலக்னத் தொடர்பு ஜாதகரின் உயரத்தைக் கூட்டும்.
வாயு தத்துவம் உடையவராதலால், ஜாதகர் மெலிந்த உடலுடையவராக
இருப்பார். ஐந்துவித
உணர்வுகளில், கேட்கும் செவி உணர்வைக் குறிப்பதால் துல்லியமான
கேட்கும் திறன் உடையவர் அல்லது காது கேளாதவரைக் கொண்டு இவர் இராகுவின் தாக்கம் உடையவர்
என்று எளிதில் அடையாளம் காண இயலும்.
ஒரு கூற்றுப்படி இராகுவானவர்
விகாரமான தோற்றமும், பரமஏழை போன்ற தோற்றத்துடன், அசிங்கமான, அசுத்தமான மற்றும் அறுவருக்கத்தக்க ஆடை அணிந்து
காட்சியளிப்பார் எனவும், மற்றுமோர் கூற்று, மாசில்லாத, பளபளக்கும் பல வண்ண ஆடையுடன், கொடூரமான மாவீரன் போல் தோற்றமளிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரு வழியில், இந்த இருவகைத் தோற்றங்கள் இராகுவின் இருவித குணங்களைக் குறிகாட்டுகிறது.
இதில் ஒன்று வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொடுப்பதாகவும், மற்றுமொன்று இடுக்கண்ணையும், கஷ்ட காலத்தையும் தரக்கூடியது
ஆகும். துன்பம் வருங்காலங்களில் அதிக பக்திமார்க்க நன்மைகளைத்
தருகிறது. அதற்காக முன்னேற்றம் தரும் காலங்களில் பக்தியில் வளர்ச்சி
இருக்காது என்று சொல்ல வேண்டியதில்லை.
இராகுவின் நிறங்கள்
– தீச்சுடரின் சிகப்பு நிறம், திக்கான மஞ்சள்,
கடல் பச்சை, ஆகாய நீலம், பர்பிள், வைலட், அரக்கு நிறம்,
சூரிய அஸ்தமன வண்ணம், எலக்ட்ரிக் புளு,
மின் காந்த அலைகள் அல்லது நம் கண்களுக்குத் தெரியாத அல்ட்ரா வைலட் ஒளிக்கதிர்கள்
ஆகியவை ஆகும்.
இராகுவும், சனியைப் போன்று கீழான பார்வை உடையவர். இலக்னத் தொடர்புடைய
இராகுவைக் கொண்டு பார்வை மூலமாக ஜாதகரின் மனநிலையை, ஆளுமைத்திறனை
அறியலாம்.
இராகுவின் உருவம் பல வழிகளில்
உருவகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஒன்று, நான்கு கரங்களில் திரிசூலம், வாள் மற்றும் வட்டு ஆயுதம்
ஏந்திக் காட்சி அளிக்கிறார். மீதம் இருக்கும் ஒரு கரத்தால் அருள்பாலிக்கிறார்.
இவரது தெற்குப் பார்த்த முகமும், அணிகலன் நிறைந்த
சிகையும் உடையவர். சிங்கவாகனம் உடையவர். மற்றுமொரு வடிவம் – இருகரங்களுடன் காணப்படுவதாகும்.
ஒரு கரத்தில் கம்பளியும், மற்றொன்றில் பனைவோலையும்
உடையவராக உள்ளார். அவர் எட்டு குதிரைகள் பூட்டிய ரதத்தைச் செலுத்துகிறார்.
இன்னும் ஒரு உருவத்தில் கரங்களில் கோளத்தையும், வளைந்த பட்டாக்கத்தியையும் வைத்தபடி உள்ளார்.
வேதஜோதிடத்தில் இராகுவுக்குக்
கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் --முதன்மையானவர், துர்தேவதைகளுக்கு ஆலோசகர், அவர்களுக்கு மந்திரி,
கொடுரமானவன், கோபக்காரன், துன்புறுத்துபவன், இம்சை அரசன், ஒளிக் கிரகங்களின் மீது வெறுப்பு மிக்க எதிரி, மாயையின்
கடவுள், ஆதவனை அச்சமுறச் செய்பவன், சந்திரனின்
ஒளி மங்கச் செய்பவன், அமைதியை ஏற்படுத்துபவன், அமிர்தம் அருந்தி அழியா உயிர் பெற்றவன், முன்னேற்றத்தை
அள்ளி வழங்குபவன், அழியாச் செல்வம் மற்றும் அதீத அறிவைத் தருபவன்
ஆகியவை ஆகும்.
எனவே நண்பர்களே! இராகுவைப் பற்றிய மேலதிக விவரங்களுக்கு அடுத்து வரும் கட்டுரைகளில் காண்போம்.
வல்லமை தாராயோ பராசக்தி இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே !
No comments:
Post a Comment