உ
துவாதச (12) இராசிகளில் சூரியனின்
தாக்கம்.
லியோ என்ற சிம்மத்தை ஆட்சி வீடாகக்
கொண்ட சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு இராசியாக 12 இராசிகளையும் 1 வருடத்தில் கடந்து
முடிக்கிறது. வாழ்க்கைக்கு ஆதாரமான சூரியன், வெப்பமும், உலர்ந்ததுமான, ஆண்
கிரகமாகும். சூரியன், உடல் நலம், பலம், ஒருவரின் சமூக வெற்றி மற்றும் முன்னேற்றத்துக்கும்
காரணமாகிறான். ஒரு ஜாதகரின் மேன்மை, புகழ் போன்ற தனித் தன்மைகள், அவரது ஜாதகத்தில்
உள்ள சூரியன் இருக்கும் இடத்தை பொறுத்தே அமைகிறது. சுருக்கமாக ஜாதகரின் வாழ்க்கையே
சூரியனின் நிலையைப் பொறுத்தே அமைகிறது என்றால் மிகையாகாது. பல்வேறு இராசிகளில் சூரியனின் நிலைகளுக்கான
பலன்கள் அவர் மீது விழும் சுப, அல்லது அசுப பார்வைகளைப் பொறுத்து மாறுபடும் என்பதை
அறிக.
மேஷத்தில் சூரியன் – மேஷம்,
சூரியனுக்கு உச்ச வீடாகும். ஜாதகருக்கு தைரியத்தையும், வீரத்தையும் கொடுக்கிறது. ஜாதகர்
பிறப்பாலேயே தலைமை தாங்கும் தகுதி உடையவராக இருப்பார். பலம் மிக்க தலையும்,
எதையும் ஆலோசிக்காது திடீரெனச் செய்யும் குணமும் இருக்கும். வியாபார நுணுக்கமும்,
புதிய யுக்திகளைக் கொண்டவராகவும் இருப்பார். இப்படிப்பட்ட குணம் உடைய இவர்கள், பிறருக்குக்
கீழே வேலை பார்க்க விரும்பமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் பிறப்பிலேயே மற்றவர்களை ஆளத்தகுதி
உடையவர்கள். சுதந்திரப் போக்கு, நியாயம், சுயவிருப்பம், தனமுனைப்பு ஆகியவை உடைய
இவர்கள், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு தாம் தூம் எனக் காரியங்களைச் செய்பவர்கள் ஆவர்.
பிறப்பிலேயே சண்டைக் கோழியாய் பிறக்கும் இவர்கள், எந்த ஒரு எல்லைக்கும் செல்லத்
தயங்காதவர்கள். சுயமதிப்பீடு உடையவர்கள். மற்றவர்களுக்கு ஒன்றென்றால் இக்கட்டான
சூழ்நிலைகளிலும் உடனே ஓடிவந்து உதவத் தயங்காதவர்கள். இவர்கள் எளிதில் மனம் உடைந்து
போகிறவர்கள் அல்ல. ஊடுருவிச் செல்லும் மனோசக்தி மிக்கவர்கள்.
தத்துவார்த்தமானவர்கள். இப்படிப் பட்ட குணமுடைய இவர்கள் தலைமை ஏற்கும் போதும்,
ஆட்சி ஏறும் போதும் தங்களின் முழுத் திறமைகளையும் வெளிக்காட்டுவார்கள்.
மேஷத்தில் சூரியன் பாதிக்கப்பட்ட
நிலையில் இருக்க ஜாதகர் எரிச்சல் அடைபவர்களாகவும், முரடராகவும்,
கண்மூடித்தனமானவராகவும், மற்றவர்களின் கருத்துக்களை ஏற்க விரும்பாதவராகவும்,
ஆணித்தரமான எதிர்கருத்துத் தெரிவிப்பவராகவும் விளங்குவார். தன்னைத் தானே பெரிதாக
எடுத்துக் கொள்ளும் கர்வமுடையவராகவும், எந்த ஒரு புதிய திட்டங்களையும் எடுத்துச்
செய்யத் தயங்காதவராகவும் விளங்குவார்.
ரிஷபத்தில் சூரியன் - இந்த இராசிக்கு இருவேறு முக்கிய குணங்கள்
உண்டு. வெற்றிக்கு எத்தனை தடைகள், கஷ்டங்கள் வந்தாலும் முயற்சியைக் கைவிட்டுவிடாத போராட்ட
குணம் உடையவர்கள் என்றாலும், அதை நிறைவேற்றுதலுக்கு உரிய ஆசையும், ஆவலும், மனமும்
இருந்தால் மட்டுமே அதை முனைப்பாக எடுத்துச் செய்வார்கள். நகைச்சுவை உணர்வு
மிக்கவர்கள். நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். எதையும் செயல் முறையில் செய்யும்
ஆவல் உடையவர்கள். எதிர் மறையான பேச்சுக்களைப் பேசாதவர்கள்.
ரிஷபத்தில் சூரியன் உள்ளவர் சுயசார்பு
உடையவர்கள், எதிலும் தீர்மானமான எண்ணம் உடையவர்கள், சுயவிருப்பம் உடையவர்கள்
மற்றும் எதிலும் எச்சரிக்கை உடையவர்கள். ரிஷப சூரியன் அவர்களை பழமை விரும்பிகளாக,
மாற்றத்தை விரும்பாதவர்களாக ஆனால் எதையும் தாங்கும் இதயம் உடையவர்களாக
ஆக்கிவிடுகிறான். எந்த ஒரு காரியத்தையும் கையில் எடுக்கும் முன் தீவிர
ஆலோசனைக்குப் பிறகே செய்வார்கள். நல்லனவற்றையே நாடுவார்கள். அவர்களின் திட்டங்கள்
நிறைவேற நீண்ட நாட்களானாலும் காத்திருந்து அதன் பலனைக் காண ஆவலோடு இருப்பார்கள்.
பொறுமைசாலிகள். கோபமூட்டாமல் இருந்தால் இனிமையானவர்கள். ஆனால், கோபம் வந்தால் வீடு
தாங்காது. தலைக்கனம் பிடித்தவர்கள். கீழ்படியும் குணம் இல்லாதவர்கள். இயற்கையை,
இலக்கியங்களை, இசையை, நுண்கலைகள் ஆகியவற்றைக் காதலிப்பவர்கள். சூரியன் இவர்களை
நல்ல பொது சேவகர்களாகவும், அதிகாரிகளாகவும், உயர் அதிகாரிகளாகவும்
ஆக்கிவிடுகிறான். செல்வம் மற்றும் சொத்து சேர்க்கைக்கும் அனுகூலம் செய்கிறான்.
தந்தைக்கு அதிர்ஷ்டத்தையும், ஜாதகருக்குத் திருமணத்தையும் தருகிறான். ஜாதகரை ஆசை
அதிகம் உள்ளவராக ஆக்கி, முன்னோர் சொத்தையும், வியாபாரத்தில் இலாபத்தையும்
அளிக்கிறான். சேமிப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாகவும் ஆதாயம்
ஏற்படுத்துகிறான். பெண்களின் ஜாதகத்தில், கணவன் மூலமான வருமானங்களை அள்ளித்
தருவான்.
அதுவே, பாதிக்கப்பட்ட சூரியனாகில் ஜாதகரை
யாருடனும் ஒத்துப் போகாதவராகவும், பிடிவாத குணமுடையவராகவும் படைத்து, பலமிக்க
எதிரிகளால் இழப்புகளையும் ஏற்படுத்துகிறார். சுயநலவாதியாகவும், நோயுள்ளவராகவும், புகழ்
பெருவதைவிட கெட்ட பெயர் எடுப்பவராகவும் ஆக்கிவிடுகிறது.
No comments:
Post a Comment