குருப்பெயர்ச்சி பலன்கள்-2018- 2019
மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட கீர்த்திமான், கெட்டிக்காரர், இரக்கமுள்ள,
அதிக செலவாளியுமான மீனராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி
சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே
அமையும்.
தங்கள் இராசிக்கும் கர்ம பாவத்திற்கும் அதிபதியான குரு – புரட்டாசி மாதம் 18
ஆம் நாள், வியாழக் கிழமை, 04
– 10 – 2018 முதல் பாக்கிய
பாவமான ஒன்பதாமிடம் அமர்ந்து உங்கள் இராசியை நேரடியாகப்
பார்க்கிறார். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில்
நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் உங்கள் சமயோசித புத்தியால்
சரியாகிவிடும். நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், எதிரிகளை வெல்லுதல், அதிகரிக்கும் சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். இதுநாள்வரை இருந்து வந்த சிறு உடல் உபாதைகள் மறையும். ஏமாற்றங்கள், மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை ஆகியவை மறைந்து கணவன் மனைவிக்கு
இடையே நல்லுறவு ஏற்பட்டு வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இராஜ தந்திரத்தால் அரசியலில்
நல்ல பதவிகள் வந்து சேரும் இராஜயோகம் உண்டாகும். அரசாங்கத்தின் மூலமாக
எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதம் இன்றிக் கிடைக்கும். புண்ணிய காரிய
ஈடுபாட்டினால் தானதருமங்கள் செய்து மங்காத புகழ் எய்துவீர்கள். தவத்திலும், பூஜை
புனஸ்காரங்களிலும், தெய்வீக வாழ்க்கையிலும் பற்று ஏற்படும். தந்தையின் முழுமையான ஆதரவு கிட்டும்.
பொதுமக்களுக்குக் காப்பாளராக இருப்பார். இவர் இடும் கட்டளைகளை பிறர் ஏற்று
நடக்கும் வண்ணம் இவருடைய அந்தஸ்து உயரும். வளம் கொளிக்கும் வயல்களால் வசதி
வாய்ப்புகள் பெருகும். சமூகத்தில் இவருக்கென ஒரு தனியிடம், அதுவும் முதலிடம்
கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் வாங்கி
மகிழ்வீர்கள். வியாபாரிகளுக்கு இதுவரை வசூலாகாத கடன்கள் அனைத்தும் வசூலாகிவிடும்.
மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகி கல்வியில் மேன்மை அடைவர். புதிய தொழில்களில்
முதலீடுகள் செய்வதால் தொழில் முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். அரசுப் பணியில்
இருப்பவர்களுக்கு அவர்களின் சிறந்த பணிக்காக விருதுகள் கிடைக்கும். அரசு வெகுமதி
மற்றும் புகழ் தேடி வரும்.
குரு தனது 5
ஆம் பார்வையால் ஜென்ம இராசியைப் பார்ப்பதால் இம் மண்ணில் இவரைப்போல் உண்டோ என
பெயரும் புகழும் கூடும். தெளிவான சிந்தையால் முடங்கியிருந்த செயல்பாடுகள்
அனைத்திலும் உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். உடல் பாதிப்புகள் விலகி ஆரோக்கியம்
மேம்படும். இதயம் தொடர்பான சிகிச்சைகள், சிக்கலின்றி செய்யப்பட்டு நோய் சீராகும்.
தனியார் மற்றும் அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முதல் நிலை பெற்று பரிசுகளையும்
பெறுவர்.
குரு 7 ஆம்
பார்வையாக தைரிய பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக தைரியமாக எடுக்கும்
புது முயற்சிகளில் தவறாது வெற்றி அடைவீர்கள். பல நாளாக வேலையின்றி
அலைந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணவசதி பெருகி அடகு வைத்த நகைகளை
திருப்பிவிடுவீர்கள். அதன் காரணமாக கடன் சுமைகள் குறையும். மாணவர்களுக்குக்
கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாகன யோகம் ஏற்படும். தொலைதூரச்
செய்திகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.
குரு தனது
9 ஆம் பார்வையால் புத்திர பாவத்தைப் பார்க்கிறார். இதன் காரணமாக குடும்பத்துடன் குதூகலிக்க இனிய சுற்றுலாப் பயணங்களை
மேற்கொண்டு மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து
சேரும். குழந்தைகளின் ஒற்றுமை ஓங்கும். பத்திரிக்கைத் தொழில் சிறக்கும். சந்ததி விருத்தி
ஏற்படும். புத்தி கூர்மை, மனத்தெளிவு,
சுபவாக்கு, கல்வி கேள்வியால் சொற்பொழிவு ஆற்றும்
திறன் ஆகியவை மேம்படும். புராண இலக்கிய உணர்வு, சிறு காவியங்களை அனுபவிக்கும் திறன் ஆகியவை மேலோங்கும். தாய்வழியிலும், மனைவி மூலமாகவும் இலாபம் உண்டாகும்.
வீட்டில் சுப மங்கள காரியங்கள் நிறைவேறும்.
உத்தியோகஸ்தர்கள் – உயர் அதிகாரிகளால்
மேன்மையும் கௌரவமும் கிடைக்கும். பல போட்டிகளுக்கு இடையே தாங்கள் விரும்பிய இடத்திற்கு
இடமாற்றம் கிடைக்கும். இதுநாள்வரை தடைப்பட்ட பதவி உயர்வு சுலபமாகக் கிடைத்துவிடும்.
சீருடைப்பணியாளர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையும். அவர்களின் தனித்திறமைகள் வெளிப்பட்டு
பரிசுகளும், பதக்கங்களும் கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.
வியாபாரிகள்
- சந்தை நிலவரங்களை அறிந்து அதற்கேற்ப
வியாபார நுணுக்கங்களை மாற்றி அமைப்பதன் மூலமாக, அதிக லாபம்
அடையலாம். தாதுப் பொருட்கள், உதிரிப்
பாகங்கள் அல்லது மென்பொருள் துறைகளில் விற்பனை சூடுபிடிக்கும். அதிக விளைச்சல் காரணமாக விவசாயிகளுக்கு இலாபம் அதிகரிக்கும். பழைய
கடன்கள் அடைந்து மனதில் நிம்மதி பிறக்கும்.
. பெண்கள் ; பணிபுரியும் பெண்களுக்கு நெடுநாட்களாகத் திட்டமிடப்பட்டிருந்த
புனிதப் பயணங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். பிள்ளைகள் தங்கள்
பொறுப்புக்களைத் தட்டிக் கழிப்பதால் மனஅமைதி குறையும். சிலர்
தங்கள் பணிகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தங்கள் சமயோஜித புத்தியால், முறியடித்து முன்னேறுவர். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.
கணவனின் ஒத்துழைப்பால் வீட்டில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டொடும்.
அரசின் உதவிகள் கைகொடுக்கும். எதைச் செய்தாலும்
சிரத்தையுடன் செய்தல் வேண்டும், இல்லையெனில் கவனக் குறைவால்
காரியங்களில் தடைகள் ஏற்படும்.
மீன இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும். பொது மற்றும் சிறப்பு
விதிகளின்படி இவர்களுக்கு மிக்க நன்மையான பலன்களே ஏற்படும். 85%
ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு
ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து,
மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.