பாவங்களில் கிரகம் தரும் பலன்கள்.
நான்காம் பாவம்.
நான்காம் பாவத்திலுள்ள கிரகங்கள்-
சந்தோஷ சாம்ராஜ்யம் நான்காம் வீடாகும். சாத்திரங்கள்
இதை சுகஸ்தானம் என விவரிக்கிறது. நாம் அனைவரும், வாழ்க்கையில் சந்தோஷத்தைத் தேடி அலைவதால்,
இந்த வீடு நமது நடவடிக்கைகளை, செயல்களை எது இயக்குகிறது என்பதை நமக்குக் காட்டுகிறது.
இந்த வீடு கேந்திரமாக இருப்பதால், நமது செயல்களின் மீது பலமான தாக்கத்தை உடைத்தாய்
இருக்கிறது, கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம் என்றும், கோணம் என்பது லட்சுமி வீடு என்றும்
நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதில் முதலாவது நமது செயல்களையும், இரண்டாவது, அதில்
நமக்குக் கிடைக்கும் முடிவைக் காட்டும் வீடாகும்.
இந்த வீட்டில் அசுபர் இடம் பெற்றால், அந்த
நபர் தனது சொந்த வீட்டிலேயே சந்தோஷத்தை இழந்து, வெளிநாட்டுக்கு சென்று குடியிருந்து
வாழ்க்கை நடத்தும்படி செய்து விடுகிறது. ஆயின், சுபர் அவரை தனது சொந்த வீட்டிலேயே வாழ
வைத்து, சொந்த நாட்டிலேயே வாழவைத்து சந்தோஷத்தின் எல்லைக்கே அவரை இட்டுச் செல்கிறது.
நான்காம் வீடு சந்தோஷத்தைத் தருவதோடு, அசையா
சொத்துக்களான நிலம், வீடு ஆகியவற்றையும் அசையும் சொத்துக்களான வண்டி, வாகன வசதிகளையும்
அளிக்கவல்லது. நான்காம் வீட்டில் கௌரவமாக இடம் பெறும் சுபக்கிரகங்களின் தாக்கத்தால்,
நமக்கு மேற்சொன்னவை நல்ல முறையில் சித்திக்கிறது. இத்தோடு அதிக ஆடம்பரமான வாழ்க்கையும்
அளிக்கிறது.. ஆயினும் இந்த வீடு பாதிப்பு அடைந்தால், ஜாதகர் சந்தோஷங்களையும், சுகத்தையும்
இழக்கிறார்.
தாயின் சுகத்தை காண இந்த வீடு பார்க்கப்படுகிறது.
தாய்க்கு நோய்களால் ஒரு கஷ்டமும் இல்லாமல், நல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமேயானால்,
இந்த வீடு சுபரின் தாக்கத்தைப் பெறவேண்டும். அவ்வாறு இல்லையெனில் தாயின் ஆரோக்கியக்
கேட்டை அனுமானிக்கலாம்.
இந்த வீடு இதயத்தை ஆள்கிறது. இதன் பாதிப்பு
இதயத்தில் ஏற்படும் தொல்லைகளுக்குக் காரணமாகிறது.. எனினும், இதயத்தில் பிரச்சனை என
தீர்மானிக்கும் முன், அதன் காரகன் சூரியனின் நிலையில் பாதிப்பு உள்ளதா ?- என்பதைப்
பார்க்கவேண்டும்.
‘அர்க்கலா’ தோற்றப்படி, இந்த வீடு 3 ஆம்
வீட்டுக்கு 2 ஆம் வீடு ‘தன அர்க்கலா’, 6 ஆம் வீடு ‘இலாப அர்க்கலா’ வாகி, ‘லக்னம் சுக
அர்க்கலா’ ஆகிறது. எனவே, இந்த வீடுகளில் இருக்கும் கிரகங்களின் தாக்கமானது உடன் பிறப்புகளின்
முன்னேற்றத்திலும் (3), சேவை மற்றும் எதிரிகள் (6) ஜாதகரின் ஆரோக்கியம் (1) ஆகியவற்றில்
பாதிப்பை அல்லது முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது.
சூரியன் –
அனுகூலமான பலன்கள்
– நட்புறவு இருக்கும். மென்மையான இதயம் இருக்கும். குரலிசை, வாத்திய இசையில் ஆர்வம்
இருக்கும்.
அனுகூலமற்ற பலன்கள்
- சந்தோஷக் குறைவு, மனக் கஷ்டங்கள் ஏற்படும். ஓய்வின்மை, நண்பர்கள் அல்லது உறவினர்
குறைபாடு, இவர்களால் ஏற்படும் தொல்லைகள். தந்தை வழி சொத்துகள் இழப்பு ஏற்படும். செல்வமில்லாத
நிலை, வாகனம் இல்லாத நிலை ஆகியவை ஏற்படுதல்,
வீட்டைவிட்டு வெளியேறி தூரமான இடத்தில் வாழ்தல். தாய்க்கும், இதயத்துக்கும் ஏற்படும்
கஷ்டங்கள் ஆகியவை ஏற்படும்.
சந்திரன் –
அனுகூலமான பலன்கள்
– சந்தோஷம், திருப்திகரம், ஆடம்பரத்தில் விருப்பம், காமம், பெண்களின் சவகாசத்தில் விருப்பம்,
தியாகம் ஆகியவை ஏற்படும். நல்ல நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருப்பர். உயர்ந்த பதவி
மற்றும் நிலைகளை அடைவார்கள். தனது சொந்த ஜனக்
கூட்டத்திற்கு தலைவனாவார்கள். சிறந்த மதிப்பு, மரியாதை, எல்லா மக்களாலும் விரும்பப்பட்டு,
நேசிக்கப்படுவர். சிறந்த வீடு அமையும். வண்டி வாகன வசதிகளை அனுபவிப்பர். நீர் சம்பந்தப்பட்ட
வணிகம் செய்வர்.
அனுகூலமற்ற பலன்கள்
– பாலாரிஷ்டம் மற்றும் தாயின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும்.
செவ்வாய் –
அனுகூல பலன்கள்
– (சுபராகி, சுபரின் தாக்கம் ஏற்படும் பட்சத்தில்) நல் ஆரோக்கியம் ஏற்படும். சொந்த
வாகனங்கள் மற்றும் நிலபுலன்களை உடையவராய் இருப்பர். தாய் நீண்ட ஆயுளை உடையவராய் இருப்பார்.
அரசர் \ ஆட்சியாளர் மூலமாக நிலம் மற்றும் ஆடை ஆபரணங்கள் அன்பளிப்பாகக் கிடைத்தல்.
அனுகூலமற்ற பலன்கள்
– ஓய்வற்றவராய் இருப்பார். குடும்பத்தில் கஷ்ட நிலை ஏற்படும். இல்லறத்தில் குழப்பங்கள்
மற்றும் தொல்லைகள் எழலாம் (செவ்வாய் தோஷம் ஏற்பட) செவ்வாய் மிகவும் பாதிக்கப்படும்
நிலையில், தந்தை சீக்கிரம் மரணம் அடைவார். தாயின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், மரணமடைதல்
ஆகியவை நிகழும். நிலமற்றவராய் இருப்பார். பாழடைந்த வீட்டில் வசிக்க நேரும். ஏழ்மையில்
வாடுவதோடு, நண்பர்கள், சொந்த பந்தங்களோடு பகை ஏற்படும். நண்பர்கள் இல்லாமை. சொந்த இடத்தில்
இருந்து விலகிச் சென்று வாழ்தல். வாகனம் மற்றும் நிலபுலன்கள் இல்லாமை ஆகியவை ஏற்படும்.
புதன் –
அனுகூலமான பலன்கள்
– இனிமையான பேச்சிருக்கும். எப்போதும் ஏதாவது வேலையை, சுறுசுறுப்பாக செய்து கொண்டிருப்பார்.
பொறுமை உள்ளவர். பெரிய கண்களை உடையவர். பெற்றோர்களால் சந்தோஷமடைவார். சந்தோஷமானவர்.
அனைத்தையும் கற்றறிந்தவர். முகஸ்துதி செய்பவராக இருப்பார். நிலபுலன்கள் மற்றும் வாகன
வசதியுடன் செல்வந்தராகத் திகழ்வார். மிடுக்காக நல்ல ஆடைகளை அணிவார். புத்திசாலித்தனம்
மிக்க இவர், நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருப்பார். பல கலைகளிலும் ஆர்வமுள்ளவராக இருப்பார்.
அனுகூலமற்ற பலன்கள்
– (பாதிக்கப்பட்டால் மட்டுமே) நிலபுலன்கள், வண்டி, வாகனங்கள் இல்லாமலிருக்கும். உறவுகளுக்குள்
கசப்பு நிலவும். கபடு நிறைந்தவராக இருப்பார். கேள்விக்குரித்தான செல்வ நிலை இருக்கும்.
வம்சாவழி சொத்துக்களில் இழப்பு ஏற்படும் அல்லது அதை அடையமுடியாதபடி ஏமாற்றப்படுவர்.
குரு –
அனுகூலமான பலன்கள்
– சந்தோஷம், திருப்தி, புத்திசாலித்தனம், மிகுந்த அறிவு கூர்மை ஆகியவை இருக்கும். நன்னடத்தை,
தூய உள்ளம் உடையவராக இருப்பார். நிலபுலன், நல்லவீடு மற்றும வாகன வசதி ஆகியவை அமையும்.
தாய் நல் ஆரோக்கியத்துடன் வாழ்வார். நல்ல நண்பர்கள் அமைவர். மனைவி, மக்கள் மூலமாக சந்தோஷமான
நிலை உருவாகும். செல்வந்தராக இருப்பார். ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வார். எதிரிகளை வெல்வார்.
மத விழாக்களில் பங்கேற்பார். எதிலும் வெற்றி அடையவே ஆசைப்படுவார். அரசர் \ அரசாங்க
அனுகூலம் உண்டு. கருணை உண்டு. ஜாதி, ஜனத்தால் மதிக்கப்படுவார்.
அனுகூலமற்ற பலன்கள்
– திருப்தியற்ற மன நிலை இருக்கும். நிலபுலன் மற்றும் வாகன வசதி இருக்காது. தாயின் இழப்பு
ஏற்படும். உறவினருக்குள் மனக் கசப்பு உருவாகும்.
சுக்கிரன் –
அனுகூலமான பலன்கள் – அழகானவராய் இருப்பார். புத்திகூர்மை
இருக்கும். சந்தோஷமாக காலத்தைக் கழிப்பார். சகோதரர்கள் மூலமாக மகிழ்ச்சியாக இருப்பார்.
நல்ல குணம், மன்னிக்கும் குணம் ஆகியவை இருக்கும். வாகன சுகத்தால் மகிழ்ச்சி நிரம்பி
வழியும். தாய்க்கு நல் ஆரோக்கியம் இருக்கும். அவரை நன்றாக கவனித்துக் கொள்வர். நிலம்,
சொத்துகள், வீடுகள் ஆகியவற்றின் மூலமாக மிழ்ச்சி அடைவார்கள். நல்ல ஆபரணங்களும், ஆடைகளும்
நிறைந்திருக்கும். குலத் தலைவராக இருப்பார். தொண்டர்களிடமிருந்து அதிக அன்பளிப்புகளைப்
பெறுவார்.
அனுகூலமற்ற பலன்கள்
– நிலம் மற்றும் வாகனம் இல்லாதிருப்பார். தாய்க்கு வெந்துயர் ஏற்படலாம். பிற பெண்களுடன்
தாகாத உறவு இருக்கும்.
சனி –
அனுகூலமான பலன்கள்
– (சுபர் தாக்கத்தில், பலம்மிக்க சனியாக இருந்தால் மட்டுமே) அன்னையின் மூலமாக ஆனந்தம்
பெருகும். தனது ஜாதி மக்களால் போற்றப்படுவார். தலைமை பதவிகளை ஏற்றுக் கொள்வார்.
அனுகூலமற்ற பலன்கள்
–
சோம்பேறியாய் இருப்பார்.
தந்தைவழி சொத்துகள் இல்லாதிருக்கும். மோசமான குணம் இருக்கும். மோசமான கூட்டளிகள் அமைவர்.
தாய்க்கு ஆரோக்கியமற்ற நிலை இருக்கும். தாயை இழக்க நேரிடலாம். தாய்க்கு சந்தோஷமற்ற
நிலை மற்றும் இன்னல்கள் இருக்கும். கஷ்டமான காலங்களாய் இருக்கும். பலாரிஷ்டம் ஏற்படும். வீடு, வாகனங்களால்
சந்தோஷ மற்ற நிலை இருக்கும். குடும்ப கஷ்டங்கள் இருக்கும். காதலில் பிரிவு ஏற்படும்.
இதுவரை, நான்கு பாவகங்களுக்கான
பலன்களைப் பார்த்தோம். ஐந்தாம் பாவத்திற்கான பலன்களை அடுத்த மாத இதழில் பார்ப்போமா
நண்பர்களே ! நன்றி. வாழ்க வளமுடன்.
சிம்ம லகனத்தில் நான்காம் வீட்டில் சந்திரனும், சுகீரனும்(திதி சூன்ய கிரகம்) இருந்து நான்காம் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டில் குரு இருந்தால் தாயின் ஆயுள் எப்படி இருக்கும்?
ReplyDelete