உப
பதா இலக்னம், தரும் உன்னத பலன்கள் !
இலக்னத்துக்கு,
மாயம் ஆரூட இலக்னம் என்றால், 12 ஆம் இடத்துக்கு மாயம், உப பதா இலக்னம் ஆகும். அது கொடுக்கப்பட்டது அல்லது இழந்ததை தெளிவாக உணரக்
கூடிய நிலையைக் காட்டுகிறது. உங்கள் குலம் தழைக்க உதவுபவர்கள் யார்? – என்பதையும் காட்டுகிறது.
7 ஆம் வீடு திருமணத் துணையையும், உப பதா துணையின் குடும்பத்தைப் பற்றியும் குறிகாட்டும்
ஆரூட இலக்னம்
மிகவும் முக்கியமானதாகும். (பிரதான ஆரூடம்). அடுத்து வரும் முக்கியமான ஆரூடம்
உபபதா இலக்னம் ( 12 ஆம் வீட்டின் ஆரூடம்
). உப என்றால் அருகே அல்லது தொடர்பு, உறவு ஆகும். இலக்னத்துக்கு அருகே உள்ள
இராசியிலிருந்து இது கணக்கிடப்படுகிறது. அது அருகே வருகின்ற நபரை, தொடர்பை
உங்களுக்கான உறவைக் குறிகாட்டுகிறது.
பிரஹத் பராசர ஹோரா சாஸ்த்ராவில் ரிஷி பராசரர் நமக்கு உப பதா
இலக்னத்தைப்பற்றி விளக்குகிறார். மற்ற உறவுகளுக்கான புள்ளிகளில் இருந்து, உப பதா
இலக்னம் எங்ஙனம் வேறுபடுகிறது ?
திருமணம் மற்றும்
உறவுகளைப் பற்றி பலவழிகளில் ஆராய, பல இடங்கள் இராசிக் கட்டத்தில் உள்ளன. இவற்றை
நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உறவுக்கான கிரகங்கள் சுக்கிரனும்,
குருவும் ஆவர். இவர்களின் பாதிப்பு, நல்ல உறவுகளை அடைவதற்கு,
ஆசிர்வதிக்கப்படுவதையும், சபிக்கப்படுவதையும் குறிகாட்டும். இது முக்கியமாக அவர்களின் உறவைப்பற்றிய
அனைத்து குணங்களையும் வெளிக்காட்டும். இவற்றின் அமைவுகளை, நாம் இராசியிலும்,
நவாம்சத்திலும் பார்க்கவேண்டும். தாரகாரகார் நமது துணையின் ஆத்மா பற்றியும், நல்ல
ஆத்மாவா? என்பதையும் குறிகாட்டுவார். 7 ஆம் வீடு, மற்றவர்களுடனான நமது உறவைப்
பற்றி தெரிவிக்கிறது. அது நமது
உலகத்துக்கான நுழைவாயில். பொதுமக்கள், கூட்டாளிகளுடனான உறவையும் குறிகாட்டுகிறது.
(காரகன் – சுக்கிரன்) இது, உனது அன்புமிக்க, உன்னைப் பிரதிபலிக்கக்கூடிய காதல்
துணையைக் குறிக்கும்.
மலட்டுத் தன்மை உள்ளவரா ? அல்லது ஆண்மை மிக்கவரா ? என்ற உடல் தகுதி நிலையை,
7 ஆம் அதிபதி குறிகாட்டுவார். 7 ஆம் வீடு, பிஸினஸ் பார்ட்னரையும், காம உறவுகளையும்
குறிக்கும். நவாம்சத்தில் 7 ஆம் வீடு ஒருவரின்
திறமைகளை, ஆற்றலை மற்றும் பொதுவான இயற்கை குணங்களைக் குறிக்கும். இவ் விஷயத்தில் இராசி
7 ஆம் வீட்டை விட, நவாம்ச 7 ஆம் வீடு மேலதிக ஆதிக்கம் செலுத்துகிறது. அது கூட்டாளியின்
காம உணர்வுகளையும் குறிக்கும். ஆனால், திருமணக் கூட்டாளியை அல்லது வினையமுடைய உறவினை
உபபதா இலக்னம் குறிகாட்டும். இயற்கையாகவே எவ்விதமான குடும்பத்திலிருந்து அவர் வருகிறார்,
இருவருக்கும் எவ்வித தொடர்பு இருக்கும். இந்த உறவு நிலைத்து நீடிக்குமா? இல்லையா? கடைசியில்
என்னவாகும் என்பதையும், இந்த உறவின் மூலமாக எத்தனை குழந்தைகள்? முந்தைய உறவில் ஏற்பட்டது
எத்தனை குழந்தைகள் ? என்பதையும் காட்டும். முக்கியமாக, திருமணம் நடக்கும் காலத்தையும்,
அது முறியும் காலத்தையும் உப பதா அறியத்தரும். பார்ட்னரின் குடும்பத்தைப் பற்றி உபபதா
இலக்னாதிபதி காட்டுவதோடு, பார்ட்னரின் மதிப்பென்ன ? மரியாதை என்ன? கௌரவமென்ன? என்பதும்
தெரியவரும்.
ஏன் உப பதா, திருமண பார்ட்னரைக் குறிகாட்டுகிறது ?
அதற்கு, முதலில், நாம் 12 ஆம்
வீட்டைப்பற்றிய விவரங்களை முழுமையாக, ஆழமாக அறிய வேண்டும். அதன் பின்னரே உபபதா ( குணபதா ) திருமண பார்ட்னரைப் பற்றி
குறிக்கிறது என்பதை அறியமுடியும். குணபதா எனும் உபபதா, 12 ஆம் இடத்தின் கற்பனை
உருவத்தை (image) காட்டுகிறது.
இலக்னத்தில் இருந்து 12 ஆம் இடம், நீ என்ன கொடுத்தாய் என்பதையும், உடலளவில் எதைக்
கொடுத்தாய் என்பதையும், உன் புத்தியையும், சக்தியையும் எங்கே கொடுத்தாய்
என்பதையும் காட்டுகிறது.
சிறைச்சாலை,
மருத்துவமனை, ஆசிரமம், இழப்பு, படுக்கை தரும் சுகங்கள், தூக்கம், (நினைவை இழத்தல்)
படுக்கை ஆகியவற்றை 12 ஆம் இடம் குறிக்கிறது. தருமம் என்பது ஒரு சக்தி, அதை எங்கே
கொடுக்கிறாய் ? என்பதையும் காட்டுகிறது.
12 இல் சுபர்கள் அமர சுபயோகம் ஏற்படுகிறது, அதனால் நீங்கள் சக்தியை
நல்லவற்றுக்காகக் கொடுப்பதைக் காட்டுகிறது. 12 இல் அசுபர்கள் இருந்தால் அசுப யோகம்
ஏற்படுகிறது. அது உங்கள் சக்தியை எதிர்மறையான விஷயங்களுக்குக் கொடுப்பதைக்
காட்டுகிறது. சூரியன் மரண காரக ஸ்தானமான
12 இல் இருக்க, அது சனி காரகம் பெறுவதால் அங்கு வாழ்க்கையோ / வெளிச்சமோ
இருப்பதில்லை. இதனால், சூரியனில் இருந்து 12, 2, 6 மற்றும் 8 ஆம் இடங்கள் (ஒளி)
வெளிச்சம் தரும் சக்தியைத் தருவதில்லை.
12 ஆம் வீடு கொடுப்பதற்கான
மற்றும் இழப்புக்கான வீடும் ஆகும். அதன் ஆரூடம்,
நீ யாருக்குக் கொடுக்கிறாய் என்பதைக் குறிகாட்டும். நீ அதிகமாகவும், அடிக்கடியும் கொடுப்பது,
உன் மனைவி, மக்களுக்குத்தானே?. ஒருவன் சம்பாதிக்க ஆரம்பிக்கும் போதும், கொடுக்க முடியும்
போதுதானே, திருமணமே நிகழ்கிறது. அது சில நேரங்களில், சும்மா, பண உதவியாகவும் இருக்கலாம்
அல்லது சில நேரங்களில், குடும்பத்தைப் பேணிப் பாதுகாப்பாகவும் இருக்கலாம். இதில், முக்கியமானது என்னவென்றால், கொடுக்கவில்லை
என்றால், உறவும் நீடித்து நிலைப்பதில்லை. எதையும் செய்ய மற்றும் கொடுக்க முடியாதவர்களை
யார் மணப்பார்?
7 ஆம் வீடு, 8 ஆம் வீட்டுக்குப் 12 ஆம் வீடு, அது பிரிவை அகற்றி, திருமணம்
அமைவதைக் குறிகாட்டுகிறது. 12 ஆம் வீடு, காமவுறவைக் குறிப்பதல்ல, அது தனிமையில் இருப்பதையும்,
திருமணம் ஆகாத நிலையையும் குறிகாட்டுகிறது.
12 க்கு 8 ஆம் வீடான 7 ஆம் வீடு, தனிமையின், முடிவைக் காட்டுகிறது. 12 ஆம் வீடு
சன்யாசத்திற்கும், திருமணம் ஆகா நிலைக்கும் தொடர்புடையது. இதிலிருந்து 8 ஆம் வீடான
7 ஆம் வீடு, மேற்சொன்ன நிலைகளை, திருமணத்தின் மூலமாக முடிவுக்குக் கொண்டு வருகிறது.
எனவே, சன்யாசத்திற்கான நிலை 7 ஆம் வீட்டிலிருந்து தெரிகிறது. சன்யாசத்தில் நுழையவும்,
அது நீடிக்கவும், 7 ஆம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.
5 ஆம் வீட்டுக்கு
8 ஆம் வீடு 12 ஆம் வீடாகும். எனவே, அது உங்கள் குலம் / பரம்பரை / குடும்பம் தழைத்து
ஓங்குவதைக் காட்டும். உங்கள் குலம் தழைக்க யார் உதவுவார்? - என்பதை உப பதா இலக்னம்
காட்டும். 5 ஆம் வீட்டுக்கு 3 ஆம் வீடு, 7 ஆம் வீடு, உபஜெய ஸ்தானம். இது உங்கள் குல
முன்னேற்றத்தைக் குறிகாட்டுகிறது. 12 ஆம் வீடு 7 ஆம் வீட்டுக்கு 6 ஆம் வீடு, 7 ஆம்
வீட்டுக்கு உப ஜெய ஸ்தானம், எனவே, அது காம இன்பத்தைக் கூட்டும். ஆதலால், 12 ஆம் இடம்
படுக்கை சுகத்துக்கு உரியதாகிறது. 7 ஆம் வீட்டின் திருமண வாழ்க்கையின் நெருக்கத்தை
வளர்க்கும் இடமாகும். 6 ஆம் வீடு 5 க்கு 2 ஆம் வீடு ஆதலால், குழந்தைக்கு நல்லதல்ல.
ஏனெனில், 5 க்கு 2 – 6 குழந்தைகளுக்கு மாரக ஸ்தானமாகும். குலம் தழைக்காது. தனிமையைத்
தருமன்றோ? 12 ஆம் வீடு, முக்கியமாக உறவுகளைக் காட்டும். ஆனால், காம ஆசைகளை, விருப்பங்களைக்
குறிகாட்டாது..
முதல் கணவன் உப
பதாவின் மூலமாகவும், இரண்டாவது, உப பதாவுக்கு 8 ஆம் வீட்டின் (உப-2), மூலமாகவும்,
3 வது கணவன், உப-2 விலிருந்து 8 ஆம் இடத்தின் மூலமாகவும் காண வேண்டும். முதல் துணையின்
குணம், நவாம்ச 7 ஆம் வீட்டிலிருந்தும், அடுத்துவரும் உறவினை நவாம்ச 2 வீட்டின் மூலமாகவும்
(7 க்கு 8 ஆம் வீடு, 2 ஆம் வீடு). 3 வது பார்ட்னரை 9 ஆம் வீட்டின் மூலமாகவும்( 2 ஆம்
வீட்டுக்கு 8 ஆம் வீடு 9 ஆம் வீடு) அறியலாம்.
உப பதாவின் மூலமாக பலன் காண்பது எப்படி?
முன்னரே,
குறிப்பிட்டது போல், உபபதா இலக்னம், பார்ட்னரைப் பற்றியும், உறவுகளைப்பற்ற்றியும்
குறிகாட்டுகிறது. பார்ட்னரின் குணங்கள், வேலை, அவர்கள் குடும்பம் பற்றிய
விவரங்கள், அந்த உறவால் ஏற்படும் குழந்தைகள், நீடித்த வாழ்க்கை, பலனளிக்கும் உறவு
மற்றும் திருமணம் ஆவதைக் குறிக்கும்.
உப பதா
இராசிகள் மற்றும் இணைவுகள்.
பராசர முனிவர்,
முதலில் சுப, அசுப கிரகங்களின், இராசிகளின் அடிப்படையில் உப பதா பற்றி
விளக்கியுள்ளார். சுப, அசுப கிரகங்களின் குணத்தின் அடிப்படையில், உப பதா
எந்தவிதமான உறவுகளைத் தரும் என்று நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சுப அதிபதி, சுப
கிரக இணைவுடன் இருக்கும் போது சந்தோஷமான உறவுகளைத் தரும். பொதுவாக, கிரகங்களின்,
நன்நிலை நல்ல உறவுகளைத் தரும்.
சூரியன், உறவுகளை
ஆதரிக்கும். நீசமானால், அது அசுப்பலன் தரவல்லது. உப பதா, 12 ஆம் வீட்டில் இருந்து கணக்கிடப்
படுவதால், சூரியன், தனது ஆசிகளை, உப பதா இலக்னத்துக்கு வழங்குகிறான். சூரியன் நமது
பரம்பரையைக் குறிக்கும். உப பதா, யார் நம் குலம் தழைக்க, உதவுவார்கள் என்பதையும்
குறிகாட்டுவதால், சூரியன் குலம் காக்கும் பொறுப்பை ஏற்று, பாதுகாப்பளராகத்
திகழ்கிறார். எனவே, இதன் மூலமாக, சூரியன், இவ்விடத்தில் சுபராகக் கருதப்
படவேண்டும். சூரியன், தன் பகை வீட்டில் இருக்கும் போது மட்டும், சிறிது, குறைவாக
பலன் தருவார். ஆயின், நீச சூரியன் உப பதாவை பாதிக்கும். ஒரு கிரகம் உச்சம் ஆகும்
போது, அது பாவகிரமாக இருப்பினும் உப பதாவுக்கு உதவும், அதிக நல்ல பலன் தரும்.
எனெனில், அப்போது அது சாத்வீக குணத்தைக் கொள்ளும். இருப்பினும் மற்ற கிரகங்கள்,
தனது தீய குணங்களை ஓரளவு கொண்டிருந்தாலும், உபபதாவுக்கு சூரியன் மட்டும், தூய
சுபராகத் திகழ்வார்.
பலன் காணுதல் சில நேரங்களில், மாறுபட்ட
விதமாகவும் இருக்கும். உதாரணமாக, சுப இராசியாக இருந்து, அசுப கிரக பார்வை
ஏற்பட்டால், நல்ல மனிதரைக் குறிகாட்டினாலும், இந்த அசுப பார்வையால் அவர்கள் உறவு
மோசமாகும். கெடும். விருச்சிகம், உப பதாவாகி, நீச சந்திரன் இருந்து, சுப கிரக
பார்வை பெற்றால், தீய நபராக இருந்தாலும், சுப பார்வையால் அவர்களுக்குள்
நல்லிணக்கம் ஏற்படும்.
‘சுப பந்தத்
சுந்தரி’ என்கிறார். அதாவது, உபபதா, சுப கிரகத்தைத் தொடர்பு கொள்ளும் போது,
பார்ட்னர்/ உறவு அழகாகிறது என்கிறார் ஜெய்மினி முனிவர்.. இது உறவுடன் சிறப்பான
அனுபவத்தை உருவாக்குகிறது. நீங்கள் கொடுப்பதை உங்கள் பார்ட்னர் சந்தோஷமாகப்
பெற்றுக் கொள்ளுகிறார். இதுவே, அசுப தாக்கம் பெற்றால், துணை கடுமையானவராகி, அதிகமாக டிமாண்டும்
செய்கிறார்.
உப பதா அதிபதி
உச்ச உப பதா
அதிபதி பிரபுத்துவம் மிக்க பார்ட்னரையும், நீச அதிபதி அதற்கு எதிர்மறையான
வகையிலும் கொண்டு வருகிறார். என்று, பராசர மகா முனி, விளக்குகிறார். அதுபோலவே,
உச்ச உபபதா இலக்னாதிபதி, உயர்வான, உன்னதமான, நல்ல உயர் குடும்பத்திலிருந்து
பார்ட்னரையும், கொண்டுவருவார். அதுவே, நீச உப பதாதிபதி கொண்டுவருவது எதிர்மறையான
வகையில் இருக்கும். - என ஜெய்மினி மகா முனிவர் குறிப்பிடுகிறார்.
உச்ச கிரக தொடர்பு
உப பதா இலக்னத்துக்கு ஏற்பட்டால், அதுவும் ஆட்சி வீடானால் அது
அதன் நிலையை உயர்த்தும். உப பதாதிபதி எவ்வளவுக்கெவ்வளவு பலமாக உள்ளாரோ,
அந்த அளவுக்கு உயர்வான, உன்னதமான, சிறப்பான குடும்பத்தில் துணை அமையும்.
நவாம்ச 7 ஆம் அதிபதி தரும் பார்ட்னரைப்
பற்றிய கதையை விட அதிகமான கதைகளைத் தருபவர், உப பதாதிபதி ஆவார். விருச்சிகம்
அல்லது கும்பத்தில் ஆரூடம் அமையும் போது, இரண்டு அதிபதிகளுக்கும் ஒரு சக்தி
இருக்கும். சில நேரங்களில், பலம் மிக்க / அதிக தாக்கம் கொண்ட கிரகமானது, பலன்
அளிக்கும். சில நேரங்களில், பலம் குறைந்த கிரகங்கள், பலனை முதலிலும், பிறகு, பலம்
மிக்க கிரகம் தன் பலனை அளிக்கிறது. உப பதாவின் பலம் மிக்க தன்மையே எப்போதும், அந்த
உறவு சட்டப்படி உள்ளதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும். பலமிழந்த நிலையில்,
இந்த பந்தம் திருமணமாக மலர்வதில்லை. ( உப பதாவுக்கு 6, 8, 12 இல் அமர, சாபங்கள்,
பாதகங்கள், தீய நிலைகள் உப பதாவை பாதிக்கும்.)
உப பதா இலக்னத்துக்கு 2 ஆம் இடம் உறவுகளுக்கு, மிகவும் சிக்கலான, கடும் சோதனையான,
நெருக்கடியான, தீர்மானிககக் கூடிய இடமாகும். இதுவே, உறவு தொடருமா? இல்லையா? என்பதை
தீர்மானிக்கக் கூடியதாகும். எனெனில், இது மாரக ஸ்தானங்களில் ஒன்று. எனவே, இது உறவின்
நீண்ட / குறுகிய ஆயுளை / நீடிப்புத் தன்மையை தீர்மானிக்கும். பலம் மிக்க, உப பதாவுக்கு,
2 ஆம் அதிபதி ( சுப இணைவு, பார்வை) திருமணத்துக்குக் கை கொடுக்கும். பலமற்ற அதிபதி
மற்றும் அசுப இணைவு திருமணத்தை கெடுக்கும்.
உப பதாவுக்கு, 2
ஆம் வீடு, பிறரைச் சார்ந்து வாழ்கின்ற உறவு / திருமணத்தைக் குறிக்கும். 2 ஆம் இடம்
பலம் மிக்கதாக இருந்து, உப பதாவில் அசுப தாக்கம் இருந்தாலும் ( எதிர்மறை உறவு
ஏற்பட ) 2 ஆம் வீடு, உறவை முழுவதுமாக நிலைநாட்டி, இணைந்தே இருக்கச் செய்யும்.
இதுவே, உப பதாவுக்கு 2 இல் அசுப தாக்கம் இருந்து, உப பதா பலம் மிக்கதாக இருந்து
அவர் நல்லவராக இருந்தாலும் உறவை முறிக்கும். உறவின் நிலையை சீர்தூக்கிப் பார்க்க,
உப பதா இலக்னம் உதவுகிறது. அந்த உறவு நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைச்
சீர்தூக்கிப் பார்க்க, உப பதாவுக்கு 2 ஆம் இடம் உதவுகிறது எனலாம். . இதுவே ரிஷி
பராசரரின் கூற்று.
உப பதா இலக்னம்
பற்றி ரிஷி பராசரர் மேலும் பல ஸ்லோகங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஸ்லோகங்கள் மேலும் இந்தக் கோட்பாடுகளை
பற்றி மிகவும் ஆழமாக அறிந்து கொள்ள வழி காட்டுகிறது. இதில் உப பதாவை பற்றி மட்டும்
அல்லாமல், அதற்கு 2 ஆம் இடத்தைப் பற்றியும் அதிக ஸ்லோகங்களில் குறிப்பிட்டுள்ளார்.
ஓ ! மேன்மையான
பிராமணனே ! உப பதா இலக்னம் அல்லது அதற்கு
2 ஆம் இடத்தில், அதற்குரிய கிரகம் இருக்க, அல்லது அவை அதன் சுய வீடுகளில்
இருக்கவும், மனைவி / கணவனின் இறப்பு இளமையிலேயே ஏற்படும். ஆனால், களத்திரத்தைக்
குறிக்கும் கிரகம், தனது சுயவீட்டில் இருந்தால், இறப்பு பிற்காலத்திலேயே ஏற்படும்.
இதையே, ஜெய்மினி முனிவர் வேறு விதமாகக் குறிப்பிடுகிறார். 2 ஆம் வீட்டின் அதிபதி
அங்கேயே இருக்க அல்லது அவர் தனது சொந்த வீட்டிலோ, உச்சவீட்டிலோ இருந்தால் துணையின்
சாவு இளமையிலேயே இருக்கும். எவ்வளவு காலம் இணைந்து வாழ்வார்கள் என்பதை உப பதா
இலக்னம் காட்டும். ஆனால், இணைந்து வாழ்வார்களா ? மாட்டார்களா ? என்பதை 2 ஆம் இடம்
காட்டும்.
உப பதாவுக்கு 2 ஆம்
வீட்டுக்கு அசுப பார்வை அல்லது இணைவு ஏற்பட, ஜாதகர் தன் மனைவியை இழப்பார் அல்லது
இந்த லோகத்தை வேறுப்பார். ஆயினும் பிறப்பு ஜாதகத்தில் சன்யாசத்துக்கான யோகம்
இருக்க வேண்டும். அப்படி இருந்தாலும், உப பதா இலக்னம் பலம் மிக்கதாக இருந்தால்
திருமண யோகம் ஏற்பட்டு திருமணம் நடக்கும். அதேபோல் 2 ஆம் வீடு பலமாக இருந்தால்,
ஜாதகர் திருமண பந்தத்தில் இருந்து விலக முடியாது. எனவே, அவர்களின் சன்யாசக் கனவு
பலிக்காது. சுப தொடர்பு ஏற்பட இவை நடக்காது. அசுபத் தொடர்பு, நீடிக்காத உறவையும்,
எதிர்மறையான முடிவையும் தரும். உப பதா அதிபதி மற்றும் 7 ஆம் அதிபதி தொடர்பு,
எவ்வாறு இருவருக்குள் பிரிவு ஏற்படும் என்பதைக் குறிகாட்டுகிறது. உப பதாவும் அதற்கு 2 ஆம் வீடும் பாதிப்பு அடைய,
திருமணத்துக்கும் வாய்ப்பு இருக்காது, சன்யாசத்துக்கும் தடை ஏற்படாது.
துணையின், இளமை மரணத்துக்கு, இராசியிலும், நவாம்சத்திலும் 7 ஆம் அதிபதியின்
இணைவும், உப பதாவுக்கு 2 ஆம் வீடு, ஸ்திர காரகனில் இருந்து , ( ஆணுக்கு சுக்கிரன்
– பெண்ணுக்கு குரு ) 3 ஆம் வீட்டுடன் தொடர்பு கொள்ளும் போதும் குறிகாட்டப்படுகிறது.
இதுவே, இறப்பின் மூலமான அவர்களின் பிரிவைக் குறிகாட்டும். உப பதாவுக்கு 2 ஆம் வீட்டில்
உச்ச கிரகம் இருக்க, ஜாதகருக்குப் பல மனைவியர் அமைவர் என பராசரர் சொன்னதை ஜெய்மினியும்
ஆமோதிக்கிறார். உப பதாவுக்கு 2 ஆம் வீட்டில் சனி, இராகு இடம் பெற, ஜாதகர் தன் மனைவியை,
விபத்து, பெருந்துன்பம், இடர், இறப்பு, இயற்கை சீற்றம், அவதூறு, வீண்பழி போன்ற காரணங்களுக்காகப்
பிரிவார். சுபர் பார்வை இந்த நிலையை மாற்றும் என, ஜெய்மினி உரைக்கிறார்.
உப பதா இலக்ன
இராசி மற்றும் அதற்கு 2 ஆம் இராசி ஆகியவை மிக முக்கியமானவை ஆகும். இவை இரண்டும் பகையானால், உறவை முறிக்க
விருப்பம் எழும். உறவு முறியுமா ? முறியாதா ? என்பது உப பதா மற்றும் 2 ஆம்
வீட்டின் நிலையைப் பொருத்தே அமையும்.
உப பதா, இராசி, நவாம்ச 7 ஆம் இடங்கள், திருமண காலம்
நிர்ணயிக்க ஆராயப்படவேண்டும்.
உறவு முறியும் போது இருக்கும் நிலை என்னவாக இருக்கும் ?
உப பதாவின் 2 ஆம்
வீட்டு காரகங்களை, அது முறிக்கும் போது, அந்த பாவம் முறிகிறது. உதாரணமாக, உப பதா
இலக்னாதிபதி, 9 இல் இருக்க, அதற்கு 2 ஆம் வீடான 10 ஆம் வீடு காரகங்கள்
பாதிப்படையும். எனவே, அந்த ஜாதகருக்கு, தொழிலில் பிரச்சனைகள், இழப்புகள், புகழ்
இழப்பு, மரியாதை இழப்பு ஆகியவை இந்த உறவின் முறிவின் காரணமாக ஏற்படும். உப பதா 3
வீட்டில் அமைந்தால், இந்த உறவு முறிவு
ஏற்படும் போது, ஜாதகர் வீட்டை, சந்தோஷத்தை இழக்கலாம். அதுவே (உ.ப) 4 இல்
இருந்தால், இந்த முறிவின் போது, நிரந்தரத் தன்மையை , அல்லது 5 வீடு குறிகாட்டும்,
தெய்வ பக்தியை, இழப்பார். சில காரகங்கள்
சிதைவுறும்.
உப பதாவுக்கு, 2 ஆம் வீட்டில் சந்திரன், சனி இருக்க, பிரிவின் போது, ஜாதகர், மிகுந்த
மன அழுத்தத்துக்கு ஆளாவார். புதன் இருந்தால், ஜாதகரின் நினைவாற்றல், கல்வி, அல்லது
வியாபாரம், மிகுந்த பாதிப்பு அடையும். இலக்னாதிபதி, 2 இல் இருந்தால், பிரிவால், ஆரோக்கியம்
குறைந்து, நோயாளியாகத் திகழ்வார். இதிலிருந்து, நாம் அறிவது, உறவு முறியும் போது, 2 ஆம் இடம் பாதிக்கப்பட்டு அதன் காரகங்களும் பாதிப்பைக் காட்டும் என்பதாகும்.
2 ஆம் வீட்டிலுள்ள,
சனியை சந்திரன் பார்க்க, உறவு நிலைக்க, உறவைப் பேணி வளர்க்க வேண்டும். உறவைப் பொறுத்தவரை
சூரியனும் கேதுவும், சுபர்கள் ஆவர். கேது, பக்தி மார்க்கத்தையும், வழிபாட்டு முறைகளையும்
வாழ்க்கையில் கொண்டுவரும். சூரியன் தர்ம வழிகளைக் காட்டுவார். சூரியன் 2 இல் இருந்து
அதர்ம வழிகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு, உறவு முறியும் நிலை ஏற்படும்.
பொருத்தம்
உப பதா, திரிகோணத்தில் அமைந்து அல்லது மனைவியின் இராசிக்கு எதிர் இராசியில்
அமைந்தால் அவர்களுக்கு இடையேயான பொருத்தம் சிறப்பாக இருக்கும். ஜாதகரின், இலக்னம் திரிகோணத்தில்
அமைந்து, உப பதா மனைவியின் ஜாதகத்தில் எதிர் இராசியாக அமைந்தால் பொருத்தம் சிறப்பாக
அமையும். 4 இராசிகளுக்கு பொருத்தம், சிறப்பாக இருக்கும். உப பதா கடகம் ஆக, கடகம்,
(நீர் இராசி) அதற்குத் திரிகோணங்களான, விருச்சிகம், மீனம் மற்றும் எதிர் இராசியான மகரம்
ஆகியவை பொருத்தமாக இருக்கும். உப பதா மற்றும் இலக்னப் பொருத்தம் இருவருக்கும் கட்டாயம்
இருக்க வேண்டும். ஜாதகரின் உப பதா இலக்னத்திலும், பெண்ணின் லக்னத்திலும் கிரகங்கள்
பலமிக்கதாக இருக்க, இருவருக்கும் இடையே கர்மத் தொடர்புடைய பொருத்தம் இருக்கும். உதாரணமாக,
உப பதா சிம்மமாகி அதிலோ அல்லது அதற்குத் திரிகோணத்திலோ, அதே போல் பார்ட்னரின் இலக்னத்திலோ,
திரிகோணத்திலோ, சூரியன் இடம்பெற, சிறப்பான பொருத்தம் இருக்கும். இருவரின் உப பதா இலக்னங்களும், அதே இராசியாக இருக்க,
இருவருக்கும், பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாக இருக்கும்.
உப பதா கணக்கிடும் முறை
1. 12 ஆம் வீட்டின் கிரகம் எது எனப்
பாருங்கள். உதாரணமாக – சூரியன் என்று கொள்ளுங்கள்.
2. 12 ஆம் வீட்டில் இருந்து, எவ்வளவு
தூரத்துக்கு, சூரியன் நகர்ந்துள்ளது எனப் பாருங்கள். 2 வீட்டில் சூரியன்
இருந்தால், 12 ஆம் வீட்டுக்கு, 3 ஆம் வீட்டுக்கு நகர்ந்துள்ளார் எனலாம்.
3.
2 ஆம் வீட்டில் இருந்து 3 வீடு கணக்கிட்டால் 4 ஆம் வீடு வரும். எனவே,
தனுசு உப பதா ஆகும்.
4. உப பதா 12 அல்லது 6 ஆம் வீட்டில் அமைந்தால், அதில் இருந்து 10 ஆம்
வீட்டைக் கணக்கிட உண்மையான உப பதா இலக்னம் கிடைக்கும்.
திருமணத்தில்
உப பதாவின் முக்கியத்துவம் என்ன?
திருமணத்தைப் பற்றிய துல்லிய பலனைக் காட்டும் உப
பதா இலக்னம். உப பதா இலக்னத்தின் மீது தாக்கத்தைக் கொண்ட கிரகம், பார்ட்னரின்
ஜாதகத்தில் கோலோச்சும். ஒருவருக்கு தனுசு உப பதா இலக்னமானால், துணையின்
ஜாதகத்தில், குருவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அவருடைய இலக்னம் குருவால்
ஆளப்படும் அல்லது பார்வை பெறும். அவரின், இராசி அல்லது நவாம்ச இலக்னம் குருவின்
தாக்கம் பெறலாம். அதேபோல், உங்கள்
ஜாதகத்தில், உப பதாவைப் பார்க்கும் கிரக தாக்கம் மனைவியின் ஜாதகத்தில் மேலோங்கும்.
உதாரணமாக, சூரியன் உப பதா இலக்னத்தைப் பார்த்தால், உங்கள் மனைவியின் ஜாதகத்தில்,
இலக்னம், சந்திரா இலக்னம், நவாம்ச இலக்னம், சூரியனின் தாக்கம் பெறும்.
எனவே, நண்பர்களே !
ஜெய்மினி முனிவர் மற்றும் பராசர மகரிஷி வழங்கிய உப பதா இலக்னம் மற்றும் திருமணம்
பற்றிய விளக்கங்கள் தங்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும். வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment