Search This Blog

Sunday, 17 October 2021

 

நவாம்சம்



         வேத ஜோதிடத்திலும், நவீன கால ஜோதிடத்திலும் நவாம்சம் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. சோடஸ வர்க்கத்தை, ( 16 விதமான வர்க்கக் கட்டங்கள்) ‘பிருகத் பராசர ஹோரா சாஸ்த்ரா’ - வில் அலசப்படும் போதும், இராசிக் கட்டத்துக்குப் பிறகு, நவம்சக் கட்டமே மிக முக்கியமான வர்க்கக் கட்டம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘விம்ஸோ பாக’ பலத்தை அளவிடும் போதும், அனைத்து வர்க்கக் கட்டங்களிலும், நவாம்சக் கட்டமே மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. இராசிக் கட்டத்துக்குப் பிறகு இறங்கு வரிசையில், அதிக பலத்தைப் பெறுவது நவாம்சக் கட்டமே ஆகும். எனவே, எந்த விதமான பலன் காணும் போது, நவாம்சக் கட்டமே முக்கியத்துவம் பெறுகிறது.

         ‘கிரகாணாம் அம்சிகாம் பலம்’ என்ற நம் அறிவு சார்ந்த, முன்னோர்களின் கூற்று, அம்சமே, நவாம்சமே பலம் என்பதை நமக்கு உணர்த்துகிறது. பலன் காணும் போது, ஒரு கிரகத்தின் தன்மையை, அது நவாம்சத்தில் இடம் பெற்றுள்ள, அதன் உச்ச, நீச, நட்பு, பகை  நிலைகளைக் கொண்டு நாம் அறிய நவாம்சக் கட்டம் நமக்கு உதவுகிறது. இராசிக் கட்டத்தில் நீசமான ஒரு கிரகம், நவாம்சக் கட்டத்தில், உச்சம் பெறுமானால், ஜாதகர் தன் வாழ்க்கையில் உச்சத்தை அடைவார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  அதேபோல், இராசியில் உச்சம் பெற்று, நவாமசத்தில் நீசம் பெற்ற கிரகம், ஜாதகரை, கீழான நிலைக்குத் தள்ளிவிடும். கிரகத்தின் அம்ச பலத்தைக் காண்பதோடல்லாமல், ஜாதகரின் குடும்ப வாழ்க்கை, திருமணம் பற்றியும் அறிய நவாம்சக் கட்டம் உதவுகிறது என ‘பிருகத் பராசர ஹோரா சாஸத்ரா’ குறிப்பிடுகிறது. வெவ்வேறு வழி முறைகளில், நவாம்சத்தின் மூலமாக பாவ பலன்களை, எங்ஙனம் அறிவது என்பதையும் அது நமக்கு உணர்த்துகிறது.

         தற்காலத்தில், பல ஜோதிடர்கள், நவாம்சக் கட்டத்தின் மூலமாக, எங்ஙனம் பலன் காண்பது ? – என்ற வழி முறைகளை அறியாமலே, ஜாதகக் கட்டத்தை வைத்து மட்டுமே பலன் காண முற்படுகின்றனர். நவாம்சக் கட்டத்தில் பலன் காண முற்படும் போது, அதில் உள்ள கிரகங்களின், தன்மையும், நிலையும், இராசியில் உள்ள இலக்கினப்படி, ஆராய வேண்டும் என ‘சந்திர கலா நாடி’ யில் குறிப்பிடப் பட்டுள்ளது.

         இராசிக் கட்ட இலக்னத்தில் இருந்து, நவாம்சக் கட்டத்தில் ஒரு கிரகம் நகரும் போது, முதல் வீடு – இலக்கினாசம் என்றும், 2 ஆம் வீடு – வித்தாம்சம், 3 –தைரியாம்சம், 4 – சுகாம்சம், 5 – புத்திராம்சம், 6 – ரோகாம்சம், 7 – பார்யாம்சம், 8 – நிதானாம்சம்,  9 – பாக்கியாம்சம், 10 – கர்மாம்சம், 11 – இலாபாம்சம். 12 – வியாயம்சம் என்றும் பெயர் பெறுகின்றன. நவாம்சக் கட்டங்களில் உள்ள நிலைகளைப் பொருத்து, அந்தந்த திசைகளில், அந்தந்த கிரகங்கள் அதற்குண்டான, பலன்களை, நல்லதோ, தீமையோ, அதன்படி அள்ளி வழங்குகின்றன. நவாம்சக் கட்டத்தை வைத்து பலன் காண்பதில் இதுவும் ஒரு முறையாகும்.

         அடுத்து, இராசிக் கட்டத்தில், ஒரு கிரகம் தான் இருக்கும் நிலையில் இருந்து, எத்தனை கட்டங்கள், நவாம்சத்தில் நகர்ந்துள்ளன, என்பதை, அதற்குத் தக்கபடி, பலன் காண்பது மற்றுமொரு முறையாகும். இதில், இராசி மற்றும் நவாம்சத்திலுள்ள கிரகத்தின் நிலைகளும், கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இதில், எது சரியாக வருகிறதோ, அது கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

         சோடஸ வர்க்கக் கட்டங்களின் விரிவான, விவரமான பலன்காணும் முறைகள், நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், குறிப்பிட்ட வர்க்கக் கட்டத்தின், இலக்னம் முதல், பலன் காண்பதை பழக்கத்தில் கொள்ள வேண்டும். இதில், இலக்னாதிபதி, இலக்னத்தில் இடம் பெற்றுள்ள கிரகங்கள் மற்றும் இலக்னத்தைப் பார்க்கின்ற கிரகங்களின் நிலைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வர்க்கக் கட்டத்திற்கும் ஒரு காரக கிரகம் உண்டு. நவாம்சக் கட்டத்திற்குக் காரகர், ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒருவரே, அவர் சுக்கிரன் ஆவார். பெண் ஜாதகத்திற்கு,  செவ்வாய் மற்றும் குருவையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நவாம்ச இலக்னத்தில் இருந்து, இலக்னாதிபதி மற்றும் காரகக் கிரகம், ஆகிய இருவரும், தீய நவாம்சத்தில், இருக்கக் கூடாது. ஒரு கிரகம் பலம் பெற வேண்டும் என்றால், அது அதன் சுய, உச்ச, நட்பு வீடுகளிலும், கேந்திரம் அல்லது கோண வீடுகளிலோ அமர்ந்து, சுபரால் பார்க்கப் படவேண்டும், என்பதை நாம் அறிவோமல்லவா ? இலக்கினம் அல்லது இலக்கினாதிபதி அசுபர் பார்வை பெறுவது, பாபகர்த்தாரி யோகத்தில் அமைவது விரும்பத்தக்கதல்ல.

         தசா – புத்தி பலன்களை ஆராயும் போது, தசா, புத்தி கிரகங்களின் இருப்பு \ ஸ்தான நிலைகள் ஆராயப்பட வேண்டும். அத்துடன், நவாம்சத்தில், சந்திரன் நிலையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். கோசாரத்தில், சனி, சந்திரன் மீது நகரும் போது, ஏற்படுகிற இரண்டரை வருட நகர்வில் ஜாதகரின் குடும்ப வாழ்க்கை நவாம்ச பாவப்படி, இன்னல்கள் நிறைந்ததாக இருக்கும்.    

நவாம்சக் கணக்கீடுகள்

         ஓர் இராசி 30 பாகைகளைக் கொண்டதாகும். இராசி மண்டலம் மொத்தமும், 30  12 = 360 பாகை கொண்டது. இராசியின் பாகையான 30 பாகையை 9 ஆல் வகுக்க வரும் – 3 பாகை 20 கலையே ஒரு நவாம்ச பிரிவின் (இராசியின்) அளவாகும். இவ்வாறாக, நாம் 12 இராசிகளுக்கு, 108 நவாம்சங்களைக் கொண்டுள்ளோம். நவாம்சம்,  மேஷத்தில் இருந்து கணக்கிடும் போது, மேஷத்தில் தொடங்கி, தனுசுவில் முடிவடையும்.   ரிஷபத்தில் இருந்து கணக்கிடும்போது, மகரத்தில் தொடங்கி, கன்னியில் முடிவடையும். மிதுனத்தில் இருந்து கணக்கிடும்போது, துலாத்தில் தொடங்கி, மிதுனத்தில் முடிவடையும். கடகத்தில் இருந்து கணக்கிடும் போது, கடகத்தில் தொடங்கி, மீனத்தில் முடிவடையும். இந்த முறையை அறிந்து கொண்டோமானால், இதையே சிம்மத்தில் இருந்து விருச்சிகத்திற்கும், தனுசு முதல் மீனத்துக்கும் நடைமுறைப்படுத்தலாம். நவாம்சம் அமைப்பதில் இதுவும் ஒரு முறையாகும்.

எளிய முறை

         சர இராசிக்கு, அந்த இராசியில் இருந்தே நவாம்சம் தொடங்கும். ஸ்திர இராசிக்கு, அந்த இராசிக்கு, 9 ஆம் இடத்தில் இருந்தும், உபய இராசிகளுக்கு, அந்த இராசியில் இருந்து 5 ஆம் இடத்தில் இருந்தும் ஆரம்பமாகும். இலக்னத்தையும் இதே முறையில் கணக்கிட வேண்டும்.

         இராசிகள் அதன் தன்மைகளான நெருப்பு, நிலம், காற்று,  மற்றும் நீர் என பிரிக்கப்பட்டுள்ளதையும் நாம் அறிவோம். எனவே, நெருப்பு தத்துவ இராசிகளான மேஷம், சிம்மம், தனுசு ஆகிய இராசிகளுக்கு மேஷத்தில் இருந்தும், நில தத்துவ இராசிகளான ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய இராசிகளுக்கு மகரத்தில் இருந்தும், காற்று தத்துவ இராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய இராசிகளுக்கு துலாத்தில் இருந்தும், நீர் தத்துவ இராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய இராசிகளுக்கு கடகத்தில் இருந்தும், நவாம்சம் தொடங்கும் என்பது மற்றுமொரு முறையாகும்.

         நவாம்சம், இல்லாமல் ஒரு ஜாதகத்தின் பலன்களை, மிகவும் ஆழமாக அலசுவது இயலாத காரியம் ஆகும். 9 நவாம்சங்கள், 1 நவாம்சத்துக்கு 2 - 1\4 நட்சந்திரங்களைக் கொண்டுள்ளது. எனவே, எந்த நட்சத்திரத்தில், எந்த நவாம்சத்தில் ஒரு கிரகம் அமைகிறதோ, அதைப் பொருத்தே ஜாதக பலன்கள் அமையும் என்பது வெள்ளிடை மலை.

ஒரு நவாம்சத்தைக் கடக்க, ஒவ்வொரு கிரகங்களும் எடுத்துக் கொள்ளும் நேரம்

கிரகம்

நேரம்

சூரியன்

3 நாட்கள் 8 மணி நேரம்

சந்திரன்

6 - 1\2 மணி நேரம்

புதன்

2 நாள் 5 – 1\2 மணி நேரம்

சுக்கிரன்

2 நாள் 16 மணி நேரம்

செவ்வாய்

4 நாள் 10 – 1\2 மணி நேரம்

குரு

1 மாதம் 10 நாட்கள்

சனி

3 மாதம் 10 நாட்கள்

இராகு & கேது

2 மாதம் நாள் 2 நாட்கள்

இலக்னம்

13 நிமிடம் 20 வினாடி

 

நவாம்சம் என்பது – நவாம்சகா, லாவா, அம்சா, நட்சத்ரா \ சரணபதா என்றும் அழைக்கப்படுகிறது.

       நவாம்சந்தைப் பற்றி விவராமாக, விளக்கமாக அறிந்து கொள்ள கீழ்க்கண்ட பழம்பெரும் நூல்கள், நமக்கு உதவும்.

       ஹோரா சாரா – பிருத்யுஷாஸ் முனிவர் தனது ஹோராசாரா என்ற ஜோதிட நூலில், நவாம்ச இராசிகளின் பெயரிலேயே, கிரகங்கள் இருக்கின்ற இராசியையே, மேஷாம்சா, ரிஷபாம்சா, மிதுனாம்சா, கடகாம்சா, சிம்மாம்சா, கன்னியாம்சா, துலாம்சா, விருச்சிகாம்சா, தனுசாம்சா, மகராம்சா, கும்பாம்சா மற்றும் மீனாம்சா என்று குறிப்பிடுகிறார். இந்த ராசி – காரகத்துவங்கள் பலன் காண்பதில் முக்கியத்துவம் பெறுகின்றன. நவாம்சத்தில் கிரகங்களின் நிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார், முனிவர்.

         சந்திர கலா நாடியில், நவாம்ச துல்ய இராசி மற்றும் இராசி துல்ய நவாம்சா என்ற முறை சொல்லப்பட்டுள்ளது. நவாம்சக் கட்டத்தின் மீது இராசிக்கட்டத்தை வைத்து பலன்காண ஆராய்ச்சி செய்யப்படுகிறது. ஒரு கிரகம் இராசியில் இடம்பெற்றுள்ள, அதே இராசியில் நவாம்சந்தில் மற்றொரு கிரகம்  இடம்பெற்றால், இரு கிரகங்களும், மேற்கண்ட முறையில் தொடர்பு பெறுகின்றன.    

துருவ நாடி

         துருவநாடியில், இராசிக் கட்டத்தின் இலக்னத்தில் இருந்து, நவாம்சத்தில் அமையும் இராசிகளை சுவாம்சம், தனாம்சம், ப்ராத்துராம்சா, சுகாம்சா, புத்ராம்சா, ருணாம்சா, களத்திராம்சா, ரந்தராம்சா, பாக்கியாம்சா, கர்மாம்சா, லாபாம்சா, வியயாம்சா என்று குறிப்பிடப்படுகிறது. கிரகங்கள் குறிப்பிட்ட நவாம்ச இராசிகளில் இருக்கும் போது, அந்த இராசியின் காரகங்களைக் கருத்தில் கொண்டு பலன் காணப்படுகிறது.

         நவாம்சக் கட்டம், தனித்துவமான, சுதந்திரமான கட்டம் என ‘வித்யா மாதவீயம்’ என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது. கிரகங்களின் உச்ச. நீசம், நட்பு, பகை ஆகியவையும், அவைகளுக்கு இடையேயான பார்வைகளையும் கருத்தில் கொண்டு, பலன் காணவேண்டும். இரு கிரகங்கள் ஒரே நவாம்சத்தில் இடம்பெறுவது, நவாம்ச சம்யோகம் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த இரு கிரகங்களுக்கிடையேயான தூரம் 40 பாகை, 80, 120, 160, 200, 240, 280, மற்றும் 320 பாகைகளாக இருத்தல் அவசியம்.

         இராசியில் உள்ள ஒவ்வொரு கிரகத்துக்கும், நவாம்சத்தில் உச்ச நிலையும், நீச நிலை நவாம்ச இராசிகளும் உண்டு. ஆனால், சந்திரனைத் தவிர. இராசியில், ரிஷப வீட்டில் இருக்கும் சந்திரன், ரிஷப நவாம்சத்தில் இடம் பெற முடியும். ஆனால், இராசியில் விருச்சிகத்திலுள்ள சந்திரன், நவாம்சத்தில் விருச்சிகத்தில் இடம் பெற முடியாது. அதே போல் இராசியில் விருச்சிகத்தில் இருக்கும் சந்திரன், நவாம்சத்தில், விருச்சிகத்துக்கு வரமுடியுமேயன்றி, ரிஷபத்தில் இடம் பெற முடியாது. இது, சந்திரனைப் பொருத்தவரை பலன் காண உதவிகரமாய் இருக்கும்.

         64 வது நவாம்சம், ஜாதகத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். மெதுவாகச் செல்லும் கிரகங்களான சனி, குரு, இராகு, கேது ஆகியவை, கோசரத்தில் இந்தப் புள்ளியில் வரும் போது, ஜாதகரின் வாழ்க்கையில் மிக முக்கிய நிகழ்வுகள் ஏற்படுகின்றன. சுப கிரகங்களாயின் அனுகூலமான சுப நிகழ்வுகளையும், அசுபராயின் அனுகூலமற்ற நிகழ்வுகளையும் ஏற்படுத்துகின்றன.

         பிரசன்ன மார்க்கத்தில், இதைப்பற்றிய செய்திகள், சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன. 64 வது நவாம்சப் புள்ளியானது, இலக்னம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்று நிலைகளில் இருந்தும் கணக்கிடப்பட வேண்டும். கோசார நிலைகள் அளிக்கும் பலன்களை, மூன்று நிலைகளில் இருந்தும் ஆராய வேண்டும். சந்திரன் அமர்ந்திருக்கும் நவாம்ச இராசி, 64 வது நவாம்சத்திற்கு நட்பா ? பகையா ? சமமா ? என்பதை அறிந்து, அதற்குத் தக்கவாறு, ஜாதகர் பூர்ண ஆயுள் உடையவரா ? மத்திமமா ? அல்லது அற்பமா ? – என்பதை அறியவேண்டும். அதைப்போலவே, இலக்னத்தில் இருந்தும், சூரியனில் இருந்தும் ஆயுள் நிலை அறிய வேண்டும்.

         இலக்னம் அல்லது சந்திரனுக்கு 64 வது நவாம்சத்தில் இராகு கடக்கும் போது, நெருங்கிய உறவுகளின் மரணத்தை எதிர்பார்க்கலாம். அதுவே, சனியானால் 64 வது நவாம்சத்துக்குத் திரிகோணத்தில் சஞ்சரிக்கும் போது அது, ஜாதகரின் மரணத்தைக் குறிகாட்டும் எனலாம்.

         நவாம்ச இலக்னம் மற்றும் சனியின் நவாம்ச நிலைக்கும் இடையிலான இடைவெளி எண்ணிக்கையைக் கணக்கிடும் போது ஜாதகருக்கு எப்போது, காயம் ஏற்படுதல் அல்லது மரணம் போன்ற கண்டங்கள் ஏற்படும் என்பதைக் கணக்கிடலாம். இலக்னத்தில் இருந்து, சுபகிரகம் இருக்கும் நவாம்சம் வரை எண்ண வரும் வருடங்களில் ஜாதகருக்கு எப்போது அனூகூலமான, நன்மையான பலன்கள் ஏற்படும் என்பதைக் கணிக்கலாம். அதுவே, அசுபக் கிரகம் வரை பார்க்கும் போது அனுகூலமற்ற பலன்களை அனுமானிக்கலாம்.

         இராசிச் சக்கரத்தில், சனி 12, 1 மற்றும் 2 ஆம் வீடுகளில் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனிக் காலமாகும். நவாம்சத்தில் சந்திரனுக்கு 2 இல் சனி சஞ்சரிக்கும் காலங்களில் அந்த இராசியின் காரகங்கள் பாதிப்பு அடையும். இக் காலம் 2 -1\2 வருட காலமாகும்.

         இராசியில் சொந்த வீட்டிலோ, உச்ச வீட்டிலோ இருக்கும் கிரகமானது, நவாம்சத்தில் பலம் இழந்து காணப்பட்டால், அந்த கிரகம் தரும் நற்பலன்கள் மிகவும் குறைவாகவே கிடைக்கும்.

         இராசியில் சர்வாஷ்டவர்க்கத்தில், கிரகம் பெற்ற பரல்களுடன், நவாம்சத்தில் உள்ள பரல்களை ஒப்பிடும் போது, மகாதசா மற்றும் புத்திகள் தரும் பலன்களை எளிதில் கண்டறியலாம்.

         இலக்கினாம்சா, இலக்கின நவாம்சா, இலக்கின உதித்தாம்சா ஆகியவை, இராசி இலக்கினம், நவாம்சத்தில் எங்கிருக்கிறதோ அவ்விடத்தைக் குறிக்கும் பதங்களாகும்.

         இராசி துல்ய நவாம்சத்தின் எண்ணிக்கை 9 ஆகும். ஒவ்வொன்றுக்கும் இடையேயான தூரம் 40 பாகையாகும். அதேபோல் நவாம்ச துல்ய இராசிக்கு இடையேயான தூரம் 40 பாகையாகும். சுப நவாம்சத்தின் பலன்கள் சுபமாகவும், அசுப நவாம்சங்களின் பலன்கள் அனுகூலமற்றவையாகவும் இருக்கும். இதை வைத்தே நாம் பலன்களை அனுமானிக்கப் பழக வேண்டும். ஒற்றைப்படை நவாம்ச இராசிகள் ஆண் நவாம்ச இராசிகள் அல்லது ஓஜ இராசிகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. இரட்டைப்படை நவாம்ச இராசிகள் பெண் நவாம்சம் அல்லது யுக்ம நவாம்சம் என்று அழைக்கப்படுகின்றன. இவை பாலினத்தை அறிய உதவுகின்றன.

         நவாம்ச இராசியில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றும் நடத்தைகள் கீழ்க்கண்ட அட்டவணையில் காணலாம்.

அம்சத்தின் பெயர்

பிறந்தவர்களின் குணங்கள்

மேஷாம்சா

திருடன்

ரிஷபாம்சா

சுகவாசி

மிதுனாம்சா

கற்றுத் தேர்ந்தவர்

கடகாம்சா

செல்வந்தர்

சிம்மாம்சா

அரசன்

கன்னியாம்சா

மலட்டுத் தன்மை உடையவர்

துலாம்சா

தைரியமானவர், சமாதானப் புறா

விருச்சிகாம்சா

கூலி

தனுராம்சா

பணியாள்

மகராம்சா

பாவச் செயல்கள் செய்பவர்

கும்பாம்சா

கருணையற்றவர், இரக்கமற்றவர்.

மீனாம்சா

பயமற்றவர்.

 

வர்கோத்தமாம்சாவில் பிறப்பெடுத்த ஜாதகர், திறமை மிக்கவராகவும், தலைமை பதவிக்குரிய ஆளுமை உள்ளவராகவும் இருப்பார். சனியின் நவாம்சத்தில் உள்ள கிரகம் மந்தாம்சா என அழைக்கப்படும். சனி, இராசி சக்கரத்தில் உள்ள நிலையைப் பொருத்து, மேஷம் முதல் மீனம் வரை எந்த நவாம்சத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். சரம், ஸ்திரம், உபய நவாம்சங்களை வைத்து ஒருவரின் ஆயுளை நிர்ணயிக்கலாம்.

No comments:

Post a Comment