உ
பாவங்களில் கிரகங்கள் தரும் பலன்கள்.
இந்த வீடு உபஜெய அல்லது வளர்ச்சிக்கான வீடாகும். இலக்னத்தில் இருந்து, இந்த 3 ஆம் பாவத்தில் இருக்கும் கிரகம், இலக்ன பாவ காரகங்களின் வளர்ச்சிக்குக் காரணமாகிறது. எனினும், இலக்ன பாவ வளர்ச்சிக்கு , எந்த வழிகளில் இந்த கிரகங்கள் வளர்ச்சிக்கு உதவும் என்பது, அதன் இயற்கை குணங்களைப் பொருத்தே அமையும். தைரியத்துக்கு உரிய இந்த பாவத்தில் அசுபர் இருக்க தைரியத்தைக் கொடுக்கிறது. அதன் பாதிப்பு இளைய சகோதரர் இன்மையையும், அவர்கள் இருப்பின், அவர்களுக்கு துன்பங்களையும் அளிக்கிறது. இந்த பாவத்தில் சுபர் இருக்க, மிகவும் தைரியமற்றவராகவும் அல்லது கோழையாகவும் ஆகக் காரணமாகிறது. ஆனால், இது இளைய சகோதரர்களின் ஆரோக்கியத்திற்கும், அவர்களின் செயல்பாடுகளுக்கும் நன்மையாக அமைகிறது.
இந்த வீடு, திறமை மற்றும் கெட்டிக்காரத்தனத்திற்குமான வீடுமாகும். இந்த வீட்டிலுள்ள கிரகங்கள், இந்த கிரக காரகங்கள் அனைத்திலும், ஜாதகர் நல்ல திறமையுடன் திகழச் செய்கிறது. சந்திரன் அல்லது சுக்கிரன் போன்ற கிரகங்கள், ஒருவரை ஓவியாராக்குகிறது. எனினும், இதில் மேதாவித்தனத்தையும், தனித்துவத்தையும் அளிப்பது 5 ஆம் இடமாகும். இந்த பாவமானது 9 ஆம் வீட்டுக்கு, 7 ஆம் வீடாவதாலும், யோக பாவமான 9 ஆம் வீட்டை 7 ஆம் பார்வையாக பார்க்கிறது. எனவே, சுப கிரக பார்வை யோகத்தை அதிகரிக்கிறது. அசுபகிரக பார்வை யோக நிலையை பாதிக்கிறது. உறவுகளுக்கு உரியதான 7 ஆம் வீட்டுக்கு, 9 ஆம் வீடாவதால், உறவுகளிடம் தர்ம நிலையைக் காட்டுகிறது. மேலும் நன்நடத்தைக்கும் வீடாகிறது. எனவே, இவ்வீடு பாதிப்படைந்தால் ஒருவரின் கொள்கைகள், நன்நடத்தைகள் கீழ்த்தரமாகிவிடுகிறது.
அர்க்கலாவைப் பார்க்கும் போது, 3 ஆம் பாவத்திலுள்ள கிரகங்கள், தன அர்க்கலாவாகவும், 5 ஆம் வீட்டிலுள்ள கிரகங்கள், இலாப அர்க்கலாவாகவும், 12 ஆம் வீட்டிலுள்ள கிரகங்கள் சுக அர்க்கலாவாகவும் அமைகின்றன. இவ்வாறாக ஒருவரின் செல்வம் சேர்வதிலான தைரியத்திலும், முயற்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதைப் போலவே, ஒருவரின் அறிவு வளர்ச்சியிலும், ஒருவரின் செலவினங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சுபகிரகம் அல்லது காரகர் அல்லது நட்புக் கிரகமான 2 – 5 – 12 ஆம் வீடுகளின் கிரகங்கள் 3 ஆம் வீட்டில் இடம்பெற, அந்த வீட்டின் காரகங்கள் வளர்ச்சி அடைகின்றன. அவ்வாறு இல்லையெனில், அவை 3 ஆம் வீட்டின் காரகங்களால் கஷ்டங்களைப் பெறும்.
3 ஆம் பாவத்தில் சூரியன் இடம்பெற ---
அனுகூலமான பலன்கள்- பராக்கிரமம், புகழ், செல்வம், சந்தோஷம் மிக்கவர். நன் நிகழ்ச்சிகள் நிறைந்த நல்வாழ்க்கை அமையும். புத்தி கூர்மை, தயாள குணம் மற்றும் நல்ல நண்பர்களை உடையவர். மன்னிக்கும் குணம், பொறுமை ஆகியவை இருக்கும். நோயில்லாதவர். அழகானவர். பெண்களால் விரும்பப்படுபவர். மரியாதை மற்றும் கௌரவம் மிக்கவர். எதிரிகளை வெல்பவர். ஸ்தல யாத்திரை செல்வார். கொடை வள்ளலாக இருப்பார். நல்லொழுக்கம் உள்ளவர். சுகவாசம், யோகம் ஆகிவை உடையவர். அரசரின் கருணையால் அனைத்து சுகங்களும் கிடைக்கப் பெறுபவர். சகோதரரின் முன்னேற்றம், குடும்ப வளர்ச்சிக்காகப் பாடுபடுபவர்.
அனுகூலமற்ற பலன்கள் –இளைய சகோதரர்கள் இல்லாதவர், கொடுமை மிக்கவர். உறவுகளின் எதிர்ப்பு இருக்கும். காது கோளாறு இருக்கும். குடும்ப அழிவு ஏற்படலாம்.
3 ஆம் பாவத்தில் சந்திரன் –
அனுகூலமான பலன்கள் – சகோதரர்களின் முன்னேற்றம் இருக்கும். நல்ல நிலைக்கு வருவார். அதிக சகோதரிகள் இருப்பர். ஆரோக்கியம், பலமிக்க மற்றும் தைரியம் மிக்க, இலக்கியத்தில் சிறந்த, மகிழ்ச்சி மிக்கவராக இருப்பார். நண்பர்களின் தயவை நாடி, உறவுகளின் தயவைநாடி இருப்பார். பயணத்தை மிகவும் விரும்புகின்றவர்களாயும் இருப்பர்.
அனுகூலமற்ற பலன்கள் – மூட்டு வலியால் தொல்லை ஏற்படும். சர்வாதிகாரம் – கொடூரமான மற்றும் கருமியாகவும் இருப்பார்.
3 ஆம் பாவத்தில் செவ்வாய் –
அனுகூலமான பலன்கள் – பொருளாதார ஆதாயம் பெறுவார். சகோதரர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு. (செவ்வாயின் சுப தாக்கத்தால்) பொறுமை, பராக்கிரமம் உடைய தைரியசாலியாக இருப்பார். வெற்றி காண முடியாதவர். தயாள குணம் உடையவர். பாராட்டுக்குரிய செயல்களை செய்வார், அரசரால், அரசால் கௌரவிக்கப்பட வாய்ப்புண்டு. சந்தோஷம், சுதந்திரமானவர், தன்னம்பிக்கை மிக்கவராக இருப்பார். ஆரோக்கியம் மிக்கவர். புகழ் மிக்கவராய் இருப்பர்.
அனுகூலமற்ற பலன்கள் – இளைய சகோதரர்கள் கிடையாது, மனைவியின் குணம், பண்பு கேள்விக்குறியாக இருக்கும். விபசாரிகளுடன் தொடர்பு இருக்கலாம். இளைய சகோதரர்களோடு பகை அல்லது அவர்களின் இழப்பு ஏற்படலாம். நல்ல இருப்பிடம் இல்லாதிருக்கும், டி. பீ, க்ஷயரோகத்தால் அவஸ்தை ஆகியவை ஏற்படும்.
3 ஆம் பாவத்தில் புதன் தரும் பலன்கள் –
அனுகூல பலன்கள் - அனேக சகோதரர்கள் இருப்பர். சந்தோஷம், நிலபுலன்கள் உண்டு. செல்வம் சேரும், உயர்ந்த நற்பண்புகள் அமையும். சுதந்திரமானவர். நல்லகுணம், நல்லொழுக்கம் உடையவர். பொறுமை, நீண்ட ஆயுள் உடையவர். (3 ஆம் அதிபதி பலம் பெற்றிருக்க) சகோதரர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு. வர்த்தகம் மற்றும் வியாபார விருப்பம் உடையவர். தைரியமுள்ளவர். புத்திசாலித்தனம் மிக்கவர். உலக நிகழ்வுகளிலிருந்து விலகியிருப்பர். இளைய சகோதரர்கள் இவர்களை சார்ந்து இருப்பர்.
அனுகூலமற்ற பலன்கள் - கஷ்டமான வாழ்க்கை அமையும். தொண்டையில் வியாதி காரணமாக கஷ்டங்கள் ஏற்படலாம். கோழைத்தனம் மிக்கவர். (பலமற்ற 3 ஆம் அதிபதி) மகா போக்கிரியாக இருப்பார். நண்பர்கள் இல்லாத, நிலையற்ற மனம் உடையவராக இருப்பர்.
3 ஆம் பாவத்தில் குரு இருக்கும் பலன்கள் –
அனுகூலமான பலன்கள் – பெரிய குடும்பமாக இருக்கும். அனேக சகோதர, சகோதரிகள் இருப்பர். மத,நம்பிக்கை இருக்கும். பகைகள் தீரும். எளிய வாழ்க்கை மீது நம்பிக்கை ஏற்படும். புத்திசாலித்தனம், தீர்மானமான எண்ணங்கள் மற்றும் பயணங்கள் செய்வதில் விருப்பம் இருக்கும். சகோதரர்கள் உயர் நிலை அடைவர். யோகக்காரர் ஆனால், விரும்பும் அளவு சம்பாதிக்க முடியாது. தேசிய விருது அல்லது அங்கீகாரம் கிடைக்கும்.
அனுகூலமற்ற பலன்கள் – கஞ்சத்தனம், கருமி, பொறுமையற்றவர். முட்டாள் தனமானவர். ஏழ்மையில் வாடுவார், வாய்வுத் தொல்லை ஏற்படும். தீமூட்டுதல், பாவச் செயல் செய்வர். கெட்ட குணங்களை உடையவர், மக்களால் இகழ்ந்து பேசப்படுவார். மனைவிக்குக் கட்டுப்பட்டு நடப்பார். நாணயமற்றவர், நன்றி மறப்பவர், ஒருவரோடும் நட்பு பாராட்டமாட்டார். தைரியமில்லாதவர்.
3 ஆம் பாவத்தில் சுக்கிரன் இருக்கும் பலன்கள் –
அனுகூல பலன்கள் – பொறுமை மிக்கவர். சகிப்புத் தன்மை உடையவர். அதிகமான உடன் பிறப்புகளை உடையவர். (சகோதரிகள் அதிகம்), தீர்மானமான, செல்வச் செழிப்பு மிக்க, மகிழ்ச்சி மிக்கவராய் இருப்பார்.
அனுகூலமற்ற பலன்கள் – பலவீனமான உடல்நிலை உடையவர். கருமி. எவராலும் விரும்பப் படாதவர். செல்வம் மற்றும் சந்தோஷமற்றவர். மனைவியின் ஆளுகைக்கு உட்பட்டவர். தைரியமற்ற, உற்சாகமற்ற, யோகக் குறைவானவர். பெண்கள் மேல் மோகமுள்ளவர். பண்பை இழந்து கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவர். குழந்தைகளைப் பற்றிய சந்தோஷம் இல்லாதவர். மற்றவர்களைச் சார்ந்து வாழ்வார்.
3 ஆம் பாவத்தில் சனி இருக்கும் பலன்கள் –
அனுகூலமான பலன்கள் – அனேக உடன்பிறப்புக்களை உடையவர். அறிவு கூர்மையுள்ள, தைரியம் மிக்க, பலம் மிக்க மற்றும் தீர்மானமான செயல்களைச் செய்யக்கூடியவராக இருப்பார். இயற்கையாகவே தலைமைப் பண்பு உடையவர். உயர்ந்த நிர்வாகத்திறமை உடையவர். தரும குணம், தயாள குணம் (பகைவனுக்கும் கருணை காட்டக் கூடிய தன்மை) பொறுமை\பிடிவாத குணம் உடையவர். மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை உடையவர். வெற்றிக்கு ஆசைப்படுபவர். சிறந்த மேடைப் பேச்சாளராக இருப்பார்.
அனுகூலமற்ற பலன்கள் – உடன் பிறப்புகளை இழப்பார். அவர்களால் மகிழ்ச்சி இருக்காது. கேள்விக்குரிய வகையில் சம்பாத்தியம் இருக்கும். சோம்பேறித்தனம் உடையவர். சந்தோஷமற்றவர். மற்றவர்கள் செய்த உதவிக்கு நன்றியுணர்வு இல்லாதவர். வாழ்க்கையில் பல தடைகளை எதிர் கொள்பவர். காது உபாதைகளால், வாத நோயால் துன்பம் அடைவார்.
அன்பு நண்பர்களே ! இதுவரை மூன்று பாவங்களுக்கான பலன்களைப் பார்த்தோம். அடுத்த மாதம் நான்காம் பாவமெனும் சுக பாவ பலன்களைக் காண்போமா ?
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment