உ
விமானங்களும் – விதிகளும் – விபத்துக்களும்.
நாளுக்கு நாள் உலகில் விமான விபத்துக்கள் அதிகமாகிவிட்டன. உலகின் ஏதோவொரு மூலையில் ஏற்படுகின்ற கொடூரமான விபத்துக்களில் ஏராளமானோர் மரணம் என்று தினசரி நாளிதழ்களில், செய்தி சேனல்களில் செய்திகள் வராத நாளே இல்லை என்று எண்ணும் வண்ணம், அடிக்கடி துக்ககரமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. குன்னூர், நஞ்சப்பா சமுத்திரம் அருகில், காட்டேரி மலை முகட்டில் சென்ற டிசம்பர் மாதம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், நமது தேசத்தின் ‘’சீஃப் ஆஃப் தி டிபெனஸ் ஸ்டாஃப்’’ ஜெனரல். பிபின் ராவத், மற்றும் பல வீரர்களின் மரணம் நாட்டை உலுக்கியது.
இத்தகைய விமான விபத்துக்களுக்கு ஜோதிட ரீதியான காரணிகள் யாவை ? கடந்த சில வருடங்களுக்கு முன், வலைத்தள ஆங்கில ஜோதிட குழுமம் ஒன்றில், பல ஜோதிட அறிஞர்களால் உரைக்கப்பட்ட காரணிகளின் அடிப்படையில், இதற்கு முன்னர் நடந்த பல விமான விபத்துக்களின் விவரங்களைத் திரட்டி, விபத்து நடந்த அன்றைய கோசார நிலைகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்ததின் விளைவே இக்கட்டுரை.
விமான விபத்தைப்பற்றி நினைக்கும் போதே, அனுபவம் மிக்க ஜோதிடரின் எண்ணத்தில் எழவேண்டியது நான்காம் அதிபதி மற்றும் நான்காமிடம், காற்று இராசிகளான மிதுனம், துலாம், கும்பத்தில் அமைதல் ஆகியவையாகும். இவையெல்லாம் விமான விபத்துக்குக் காரணிகள் ஆனாலும், மனித உயிரிழப்புக்கு, குருவின் பார்வையின்றி, இலக்னாதிபதி நாலில் அமர்தலே / தொடர்புறுதலே காரணமாகும். மேலும், இந்த நான்காம் வீட்டு தீய தாக்கங்களைத் தவிரவும், பொதுவான சில கிரக மற்றும் இராசி நிலைகளும் காரணிகளாகின்றன. அவையாவன- :
1. கோசார சூரியன், காற்று இராசிகளுக்கு 6, 8 மற்றும் 12 ஆம் இடங்களில் இருக்கவும். (காற்று இராசிக்கு 6 ஆம் வீடு நீர் இராசியாகவும், 8 மற்றும் 12 ஆம் இடங்கள் பூமி அல்லது நில இராசியாகும்.)
2. கோசார சந்திரன், காற்று இராசிகளுக்கு 6, 8 மற்றும் 12 ஆம் இடங்களில் இருக்கவும். (முன்னர் குறிப்பிட்டது போல் காற்று இராசிக்கு 6 ஆம் வீடு நீர் இராசியாகவும், 8 மற்றும் 12 ஆம் இடங்கள் பூமி அல்லது நில இராசியாகும்.)
3. மேலே கூறப்பட்டவற்றோடு, காற்று இராசியில் சனி இடம்பெறும் போதும் விமான விபத்து ஏற்படுகிறது.
4. விபத்துக்குள்ளான விமானமானது, அளவில் பெரியதாகின், சனி அல்லது சூரியன் காற்று இராசிகளில் இருக்கும்.
5. கேதுவானவர் – சூரியன், செவ்வாய், அல்லது சனிக்கு 4, 6, 8 மற்றும் 10 வீடுகளில் அமரவும்.
6. செவ்வாய் – சூரியன் அல்லது சனிக்கு 6, 8 இல் இருக்கவும்.
7. செவ்வாய் மற்றும் கேது சஷ்டாஷ்டகமாக அமையவும்.
8. சனிக்கு, 6, 8, அல்லது 12 இல் சூரியன் இருக்கவும்.
9. சூரியன் மற்றும் சந்திரன் சஷ்டாஷ்டகமாக அமையவும்.
10. சனி, வக்கிரநிலை அடையும் போதும், முக்கியமாக காற்று இராசிகளில்.
மேலே சொல்லப்பட்ட காரணிகளில் இரண்டுக்கு மேற்பட்ட நிலைகள் ஏற்பட விபத்தின் அளவு கூடுதலாக இருக்கும். கோசார நிலைகளை அனுசரித்துப் பயணங்களை ஒருசில நாட்கள் ஒத்திவைப்பதே நல்லது.
முதலில், மேற் சொன்ன விபத்துக்கான காரணிகளையும், பின்னர், இதற்கு முன்னர் பல தருணங்களில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விமான விபத்துக்களின் கோசார நிலைகளை ஆராய்ந்து, மேற் சொல்லப்பட்ட, காரணிகள் எவ்விதம் பொருந்தி வருகிறது எனப் பார்ப்போமா ?
‘’சீஃப் ஆஃப் தி டிபெனஸ் ஸ்டாஃப்’’ ஜெனரல். பிபின் ராவத்,சென்ற விமான விபத்தின் கோசார நிலை கீழே- விபத்து நிகழ்ந்த நேரம் பகல் 12 மணி, இடம் குன்னூர் – கிரக அமைவுகள் - கும்ப இலக்கினம், லக்கினத்தில் குரு, 4 ஆம் இடத்தில் இராகு, 10 ஆம் இடத்தில் செவ்வாய், புதன், சூரியன், கேது - 12 ஆம் இடத்தில் சனி, சந், சுக் ஆகியோர் அமர்ந்துள்ளனர்.
இராசி மண்டலத்தில் காற்று இராசி மிதுனம், துலாம் மற்றும் கும்பம் ஆகும். இதில் ஒன்றான கும்பத்தில் ஹெலிக்காப்டர் விமான விபத்து ஏற்பட்ட தருணம் - இலக்கினம் உதயமாகி உள்ளது. அதுவே , விபத்தைக் குறிகாட்டுகிறது. நவாம்சத்திலும் இலக்கினம் வர்க்கோத்தமமானது விபத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. குரு செவ்வாயின் நட்சத்திரத்தில் உள்ளதால் அசுபத் தன்மை பெறுகிறார். குரு, ஒரு வாயு கிரகமாகக் கருதப்படுகிறது. குரு இயற்கை சுபராக இருப்பினும் கும்ப இராசிக்கு அவர் அனுகூலமற்றவர் ஆகிறார்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி நான்காம் பாவத்தில் இராகு அமர்ந்து உள்ளார். 4 ஆம் அதிபதி சுக்கிரன் 12 ஆம் அதிபதி சனியுடன் இணைந்துள்ளார். பலத்த சத்தத்தோடு நொறுங்குதல் அல்லது முடிவை, மோட்சத்தைக் குறிப்பது 12 ஆம் இடம். 12 ஆம் இடம் மோட்சம், விடுதலை, விரய பாவமாகும். இராகுவே, திசை மாறிய பயணத்திற்கும், காரணமாயிற்று. அந்த விமானம் உயரமான மரத்திலோ, மலை முகட்டிலோ முட்டி, மோதி விபத்துக்குள்ளானதாகக் கருதப்படுகிறது. மேலும், விபத்து நடந்த இடத்தின் பெயர்களைப் பார்த்தோமானால். காட்டேரி மலை முகடு, நஞ்சப்பா சமுத்திரம் ஆகியவை இராகுவைத் தொட்டுக்காட்டுகின்றன.
காற்று இராசியான மிதுனத்துக்கு 6 இல் சூரியனும், 8 இல் சந்திரனும், மற்றுமொரு காற்று இராசியான கும்பத்துக்கு 12 ஆம் இடத்திலும், மதி உள்ளார். காற்று இராசியான துலாத்தை, இலக்கினாதிபதி சனி பார்வை புரிகிறார். மேலே குறிப்பிட்ட காரணிகள் விபத்துக்கு காரணமாயின.
அடுத்து, முன்னாள் ஆந்திர பிரதேச முதல்வர் திரு. ஒய். எஸ். இராஜசேகர ரெட்டி அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் செப்டம்பர், 2. 2009 இல் காலை 09-40. அளவில் விபத்துக்குள்ளானது. அந்த கோர விபத்தில் அவரும் மரணமடைந்தார். அந்த விபத்து நேர்ந்த போது உள்ள கோசார கிரக நிலைகள் – துலா இலக்கினம், 4 ஆம் இடத்தில் சந், இராகு, குரு(வ), 9 இல் செவ், 10 இல் கேது, சுக்கிரன், 11 இல் சூரியன், சனி மற்றும் 12 இல் புதன் உள்ளார்.
இதிலும், இலக்கினம் காற்று இராசியான துலாத்தில் எழுகிறது. நான்காம் இடத்தில் நீச குரு, மற்றும் இராகு இணைந்துள்ளனர். 4 ஆம் இடத்தை விபத்துக் காரகனான செவ்வாய் பார்வை புரிகிறார். குரு செவ்வாயின் நட்சத்திரத்தில் உள்ளதால் அசுபத் தன்மை பெறுகிறார்.
சந்திரனும், சூரியனும் சஷ்டாஷ்டகத்தில் உள்ளனர். 4 ஆம் அதிபதி, சனியும் தனது 3 ஆம் பார்வையால் இலக்கினத்தை பார்க்கிறார். சந்திரனுக்கு 8 இல் சனி உள்ளார். காற்று இராசியான மிதுனத்துக்கு 8 இல் சந்திரன் உள்ளார். மேற் கண்ட காரணிகள் விபத்துக்குக் காரணமாயின எனலாம்.
ஜாதகம் – 3. முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர். திரு. பாலயோகி. இவர் சென்ற ஹெலிகாப்டர் விமானம், ஆந்திர பிரதேசம், பீமாவரம் அருகே 03/03/2002, அன்று காலை சுமார் 07-40- க்கு விபத்துக்குள்ளாகி, மரணமடைந்தார். அந்த நேர கோசார கிரக நிலைகள் – மகர இலக்கினம், இலக்கினத்தில் சூரியன், சுக்கிரன், 4 இல் செவ்வாய், 5 இல் சனி, இராகு, 6 இல் குரு, 9 இல் சந்திரன், 10 இல் கேது மற்றும் 12 இல் புதன் ஆகியோர் உள்ளனர்.
இந்த கோசார ஜாதகத்தில், விபத்துக்கான காரணிகள் ஆவன – இலக்கினம் காற்று இராசியான கும்பம். 4 இல் சனி இராகு, 4 ஆம் அதிபதி சுக்கிரன் இலக்கினத்தில் உள்ளார். சூரியன் காற்று இராசியில் உள்ளார். சனி இலக்கினத்தையும், செவ்வாய் இராசியையும் பார்க்கின்றனர். விதிப்படி, செவ்வாய்க்கு 8 ஆம் இடத்திலும், சூரியனுக்குப் பத்தாம் இடத்திலும் கேது உள்ளார். செவ்வாயும், கேதுவும் சஷ்டாஷ்டகத்தில் உள்ளனர்.
ஜாதகம் – 4
முன்னாள் அருணாசல பிரதேச முதலமைச்சர் திரு. டோர்ஜி கண்டு அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விமானம், இட்டா நகர் அருகே விபத்துக்குள்ளானது. 30 / 04 / 2011 காலை சுமார் - 09-12 விபத்து நேர்ந்த போது உள்ள கோசார நிலைகள் மிதுன இலக்கினம், இலக்கினத்தில் கேது, 4 இல் சனி, 7 இல் இராகு, 10 இல் குரு, செவ்வாய், புதன், சுக்கிரன், சந்திரன், 11 இல் சூரியன் ஆகியவை உள்ளன.
இலக்கினம், காற்று இராசியான மிதுனம். அதில் கேது அமர்வு. 4 ஆம் இடத்தில் சனி. அட்டமாதிபதி, வக்ர சனி மற்றும் ருண, ரோக சத்ரு ஸ்தானாதிபதியான செவ்வாயின் பார்வை இலக்னத்தின் மீது விழுகிறது. கேது, சனிக்குப் பத்திலும், செவ்வாய்க்கு 4 ஆம் இடத்திலும் உள்ளார். காற்று இராசியான துலாத்திற்கு 6 இல் சந்திரன் உள்ளார். சனிக்கு 8 இல் சூரியன் உள்ளார். பாதகாதிபதி குருவும், அட்டமாதிபதி சனியும் பரஸ்பர பார்வை. 4 ஆம் அதிபதி புதன் நீசம். இதன் காரணமாக, விபத்து ஏற்பட்டது.
எனவே, அன்பர்களே ! விபத்துக்கான சரியான நேரங்கள் கிடைத்திருந்தால் இன்னும் தெளிவாக இருந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எழுதியுள்ளதால் காரணிகளை மட்டும் அறிந்து கொள்ளுங்கள். அடியேன், திரட்டிய இத் தகவல்கள் பயனுள்ளதாக இருந்திருக்கும் என எண்ணி இக்கட்டுரையை முடிக்கிறேன். நன்றி. வாழ்க. வளமுடன்.
No comments:
Post a Comment