உ
திருமணத் தடைக்கான நவக்கிரக பரிகாரங்கள்.
களத்திர பாவம் 7 ஆம் இடம் என்பது நாம் அறிந்ததே. மங்கையருக்கு மாங்கல்ய ஸ்தானம் என்பது 8 ஆம் இடமாகும். இவற்றில் எந்தெந்த கிரகம் இருந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
கிரக சாம்ராஜ்யத்தின் இராஜாவான சூரியன் களத்திர பாவத்தில் இருந்தால் அதற்குப் பரிகாரமாய், இல்லத்தில் ஓர் இனிய கிரக ஹோமம் செய்வது சிறப்பாகும். அதில், சூரியனுக்கு உகந்த தாமிரப் பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும். எருக்கம் பூ மாலையை லிங்கத்திற்கு அணிவித்து பூஜிக்க வேண்டும். லிங்கேஸ்வரரை 9 முறை பிரதட்சிணம் செய்ய வேண்டும். பெண்களுக்கு மாங்கல்ய பாவத்தில் சூரியன் இருந்தால், தினசரி சூரிய நமஸ்காரம் செய்தல் வேண்டும்.
ஞாயிறு தோறும் லிங்கத்திற்கு பன்னீர் அபிஷேகம் செய்வித்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்து ஆராதிக்க வேண்டும். நாள்தோறும் பன்னிருமுறை சூரிய காயத்திரி சொல்லி, வரவேண்டும். ஶ்ரீசூரிய காயத்ரி ‘’ஓம் ஶ்ரீ பாஸ்கராய வித்மஹே மஹத்யுநிகராய தீமஹி தந்நோ ஆதித்ய ப்ரசோதயாத்’’ என்பதாகும். சூரிய பகவானுக்குரிய பரிகாரத்தலங்கள் – சூரியனார் கோவில், பருத்தியப்பர் கோவில், கண்டியூர், திருப்புறவார் பனங்காட்டூர் ஆகிய தலங்களாகும்.
சப்தம பாவத்தில் சந்திரன் இருக்க ஐந்து கன்னிப் பெண்களுக்கு, வெள்ளிக் கிழமையன்று பால் பாயாசம் கொடுத்து, வஸ்திர தானம் செய்ய வேண்டும். தடை நீங்க, பௌர்ணமி நாளன்று வீட்டில் சந்திய நாராயண பூஜை செய்து சுமங்கலிப் பெண்கள் மூவருக்கு மஞ்சள், குங்குமத்துடன் தாம்பூலம் வழங்கி உபசரித்து, அவர்களின் நல்லாசிகளைப் பெற வேண்டும். திருமலை சென்று ஏழுமலையான் கோவிலில் அங்கப் பிரதட்சணம் செய்வது மேலும் சிறப்பான ஒன்று.
மங்கையர் ஜாதகத்தில் மாங்கல்ய பாவமான 8 இல் மதி இருந்தால் அயனத்திற்கு (6-மாதத்திற்கு) ஒருமுறை இல்லத்தில் இனிய சுமங்கலிப் பிரார்த்தனையை முறைப்படி நிகழ்த்தி ஆசிகளைப் பெற வேண்டும். அப்பாளுக்குப் பாலபிஷேகம் செய்வித்து, பட்டுப் புடவை சாத்தி ஆராதித்து அனுக்கிரகம் பெறுதல் நன்று. மேலும் ஒவ்வொரு சுக்கிர வாரமும், விளக்கு பூஜை செய்து, ஶ்ரீலலிதா ஸகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது சிறப்பு. சந்திரனுக்கான பரிகாரத் தலங்கள் – திங்களூர், திருவாரூர், திருப்பதி ஆகிய தலங்களாகும்.
அங்காரகன் 7 இல் அமர்ந்திருந்தால், 41 செவ்வாய்க் கிழமைகளில் ஒரு பொழுதே உணவருந்தி, விரதம் இருந்து, மதியம் பருப்பு சாதம் மட்டும் சாப்பிட வேண்டும். இரவுப் பொழுதில் மும்முறை ஶ்ரீசுப்ரமணிய புஜங்கத்தைப் சிரத்தையுடன் பாராயணம் செய்ய வேண்டும். மேலும், படுக்கை விரிக்காமல் வெறும் தரையில் உறங்கி எழுவது சிறப்பு. அமாவாசையன்று அங்காரகனுக்கு உரிய பரிகார ஸ்தலங்களான வைத்தீஸ்வரன் கோவில், சிறுகுடி ஆகிய புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று உரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது. இத்தலங்களில் விஸ்வரூப தரிசனம் காண்பது அவசியமாகும்.
அட்டமத்தில் அங்காரகன் ஆரணங்குகளின் ஜாதகத்தில் அமர்ந்தால், நவக்கிரக சாந்தி ஹோமம் செய்வது நல்லது. அங்காரகனுக்கு அதி தேவதையான அழகன் முருகனின் அழகிய ஆலயங்களில், 9 ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து 9 வாரங்கள் அந்த கோவில்களில், முருகனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, ஆலயத்தை இருமுறை வலம் வந்து ஆறுமுகனின் அருளாசி பெறுதலே பரிகாரம் ஆகும். செவ்வாய்கான பரிகாரத்தலங்கள் – பழனி, சுவாமி மலை நீங்கலாய் உள்ள மற்ற முருகப் பெருமானின் படை வீடுகள், வைத்தீஸ்வரன் கோவில் எட்டுக்குடி மற்றும் சிறுகுடி ஆகியத் தலங்களாகும்.
களத்திர பாவத்தில் புதன் இருந்தால், கற்றறிந்த வேத பண்டிதர் மூலமாக ‘’புருஷ சூக்தம்’’ பாராயணம் செய்வித்து ஹோமமும் செய்ய வேண்டும். மதுரை அரசாளும் மீனாட்சிக்கு, குங்குமார்ச்சனை செய்து வணங்கி, சொக்கநாத பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வில்வ மாலை அணிவித்து, வில்வத்தால் அர்ச்சித்து வந்தால் விவாகத் தடை, தாமதங்கள் விலகும். புதன் கிழமையன்று நட்சத்திர ஹோமம் அவசியம் செய்தல் வேண்டும்.
ஜாதகத்தில் பெண்களுக்கு அட்டம பாவத்தில் புதன் அமர, வெண்மையான மலர்களால் விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். மேலும், கஷ்டத்தில் இருக்கும் ஐந்து ஏழை, கன்னிப் பெண்களுக்கு திருப்தியாக உணவு பரிமாறி மகிழ, புதனால் ஏற்படும் தோஷம் நீங்கும். புதனுக்கான பரிகாரத் தலங்கள் – மதுரை, திருவெண்காடு, திருவல்லிக்கேணி ஶ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில், உப்பிலியப்பன் கோவில் ஆகியவை ஆகும்.
தேவகுரு 7 இல் இருந்தால், தினமும் காலையில், தூய்மையுடன் ஆதித்ய ஹிருதயம் ஸ்லோகத்தையும், குரு காயத்ரி, குரு அஷ்டோத்தரத்தையும் சொல்லி வருவது நல்லது. மேற்கண்ட ஸ்லோகங்களைச் சொல்ல முடியாதவர்கள் ‘’ ஓம் சூரிய நாராயணாய நமஹ, ஓம் குருவே நமஹ’’ என்று தினமும் 108 முறை சொல்லி வருவது நல்லது. பொன்னிற ஆடையணிந்து கொள்வது நல்லது. குரு யந்திரம் அல்லது சண்முக கவசம் செய்து இல்லத்தில் பூஜை செய்வதும், சிறந்த பரிகாரமாகும்.
குமரிகளின், 8 ஆம் வீட்டில் குரு இருந்தால், சுக்கில பட்சம் எனும் வளர்பிறை சதுர்த்தி நாளன்று சங்கடங்கள் தீர்க்கும், சங்கரனின் புதல்வன் கணேசனுக்கு, கணபதி ஹோமம் செய்து, மிருத்யஞ்சய ஹோமத்தையும் சேர்த்துச் செய்ய வேண்டும். சனிக் கிழமையன்று வீட்டில் சுந்தர காண்ட பாராயணம் செய்துவிட்டு வேத விற்பனர்கள் 8 பேருக்கு அன்னமிட்டு, வஸ்திர தானமும் செய்ய வேண்டும். கோளறு பதிகத்தைத் தினமும் காலையிலும், மாலையிலும் சொல்ல வேண்டும். இவற்றைச் செய்ய முடியாதவர்கள் குரு வாரத்தன்று நவகிரகத்தில் உள்ள குரு பகவானை 18 முறை சுற்றி வந்து, மஞ்சள் வண்ண ஆடை அணிவித்து மனதார வேண்டுதல் வேண்டும். திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், எட்டுக்குடி, திருத்தணி ஆகிய ஸ்தலங்களுக்குச் சென்று, குருவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
குருவுக்கான பரிகாரத் தலங்கள் – ஆலங்குடி, திட்டை, திருவலிதாயம், தேவூர், எட்டுக்குடி, குருவித்துறை, பட்டமங்கலம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய தலங்களாகும்.
களத்திர காரகனான சுக்கிரன், களத்திர பாவம் ஏறினாலும், கன்னியரின் 8 ஆம் வீட்டில் அமர்ந்தாலும் ஶ்ரீரங்கம் சென்று ஶ்ரீரங்கநாதருக்கும், தாயாருக்கும் பரிகார பூஜை செய்ய வேண்டும். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள சுக்கிர பரிகாரத்தலமான கஞ்சனூர், மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோவில், பண்ருட்டி அருகிலுள்ள திருநாவலூர் ஆகிய ஸ்தலங்களில் உள்ள அய்யனுக்கும், அம்பாளுக்கும் மற்றும் அசுர குருவான சுக்கிரனுக்கும் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும். சென்னை அடையாறு அஷட்லட்சுமி கோவிலிலும் பரிகாரம் செய்யலாம்.
சனி பகவான் 7 ஆம் வீட்டில் இருக்க, தேனி அருகே உள்ள குச்சனூர், மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூர் ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று பரிகார பூஜைகள் செய்துவர திருமணத் தடை, தாமதங்கள் விலகும். மங்கையருக்கு 8 ஆம் வீட்டில் மந்தன் இருக்க காலையிலும், மாலையிலும் ஆஞ்சனேயரை வலம் வந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். எட்டுமுக விளக்கேற்றி சனி பகவான் அஷ்டோத்திரத்தை மூன்று முறையும், சனி பகவான் மூல மந்திரத்தை 48 முறையும் சொல்லி பிரார்த்திக்க வேண்டும்.
திருநள்ளாறு சென்று நள தீர்த்தமாடி பரிகாரம் செய்வது சிறப்பு. அங்கு காக்கைக்கும், 8 ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதும் நல்லது. நவக்கிரக மங்கள ஸலோகத்தை தினசரி 9 முறையும் மற்றும் சுந்தர காண்ட பாராயணம் செய்வதும் மிகவும் நல்லது. திருக்கொள்ளிக்காடு மற்றும் திருக்குவளை ஆகிய ஸ்தலங்களிலும் பரிகாரம் செய்யலாம்.
இராகு களத்திர பாவத்தில் இருக்க, நவக்கிரக சாந்தி செய்வது நல்லது. நல்ல வேதம் அறிந்த பண்டிதர்களைக் கொண்டு கணபதி ஹோமம், துர்கா ஸப்தஸதி பாராயணமும், மகா சண்டி ஹோமமும் கண்டிப்பாய் வீட்டில் நடத்தப்பட வேண்டும். ஶ்ரீசக்ர யந்திரம் வைத்து தினசரி பூஜிக்கலாம். கர்நாடக மாநிலத்தில் உள்ள சுப்ரமண்யா எனும் புண்ணிஸ்தலம் சென்று சுப்பிரமணியருக்குப் பரிகார பூஜை செய்வது அவசியம் ஆகும்.
பெண்களுக்கு 8 இல் இராகு இருக்க சுதர்ஸன ஸ்லோகத்தை 8 முறை தினமும் பாராயணம் செய்ய வேண்டும். மந்திராலயம் சென்று ஶ்ரீராகவேந்திர மகானை தரிசித்து, அதன் அருகிலுள்ள பஞ்சமுகி ஆஞ்சநேயரை வணங்கி வரவேண்டும். துர்க்கை அன்னைக்கு அகண்ட விளக்கேற்றி, செவ்வாடை சாத்தி பிரார்த்தனை செய்வது உத்தமம்.
இராகுவுக்கான பரிகாரத்தலங்கள் – காளகஸ்தி, திருநாகேஸ்வரம், திருமணஞ்சேரி, திருப்பாம்புரம், ஶ்ரீவாஞ்சியம் மற்றும் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் ஆகியவையாகும்.
கேது களத்திர பாவத்தில் இருந்தாலும், பெண்கள் ஜாதகத்தில் 8 இல் இருந்தாலும் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கீழ்பெரும்பள்ளம் எனும் கேது ஸ்தலம் சென்று பரிகார பூஜை செய்ய வேண்டும். கேதுவுக்கு அதிதேவதையான சித்திர குப்தருக்கு காஞ்சிபுரத்தில் உள்ள ஆலயத்தில் பரிகாரம் செய்வது சிறப்பு. கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள திருமுருகன் பூண்டியில் உள்ள ஆலயத்தில் கேது பகவானுக்கு தனியாக சந்நிதி உள்ளது. அங்கும் பரிகாரம் செய்யலாம். திருச்சி நாகநாதர் கோவிலிலும் பரிகாரம் செய்யலாம்.
இவ்வாறு, உரிய கிரகங்களுக்கான, உன்னத பரிகாரங்களை உணர்வு பூர்வமாக, உரிய ஆலயங்களுக்கு சென்று வேண்டி விரும்பி செய்தால் திருமணத் தடைகளும், தாமதங்களும் தவிடு பொடியாகும் அன்றோ? வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment